நம்ம ஆளு படம்னா சும்மாவா? பட்டையை கிளப்பும் கில்லி ரீ-ரிலீஸ் வசூல்
விஜய் நடித்த கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வரும் நிலையில், அதன் வசூல் நிலவரம் வெளியாகி இருக்கிறது.
தமிழில் தற்போது வெளியாகும் புதுப்படங்கள் அனைத்தும் தொடர்ச்சியாக சொதப்பி வருவதால், பழைய ஹிட் படங்களை ரீ-ரிலீஸ் செய்து திரையரங்குகள் கல்லாகட்டி வருகின்றன.
அந்த வகையில் கடந்த ஏப்ரல் 20-ந் தேதி உலகமெங்கும் நடிகர் விஜய் நடித்த கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழகத்தில் மட்டும் இப்படம் 350க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டன.
இதுவரை தமிழில் ரீ-ரிலீஸ் ஆன படங்களில் வாரணம் ஆயிரம், தனுஷின் 3, கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு ஆகிய திரைப்படங்கள் மட்டுமே ஏகோபித்த வரவேற்பை பெற்று வசூல் சாதனை நிகழ்த்தின.
அவற்றையெல்லாம் தூக்கி போடும் வகையில் கில்லி படத்தின் ரீ-ரிலீஸ் அமைந்தது.
பொதுவாக ரீ-ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் ஒருவாரம் திரையரங்குகளில் தாக்குப்பிடிப்பதே அதிசயம், ஆனால் கில்லி திரைப்படம் இரண்டாவது வாரத்திலும் வெற்றிநடைபோட்டு வருகிறது. இந்த ஆண்டு ரிலீஸ் ஆன தமிழ் படங்களை காட்டிலும் கில்லி படத்துக்கு தான் அதிகளவில் மக்கள் கூட்டம் வந்துள்ளதாக திரையரங்க உரிமையாளர்களே மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி இப்படத்திற்கான டிக்கெட்டுகளும் கம்மி விலையில் தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இப்படி கம்மி விலையில் டிக்கெட் விற்பனை செய்தும் கில்லி படம் வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது. இப்படம் ரிலீஸ் ஆகி பத்து நாட்களுக்கு மேல் ஆகும் நிலையில், தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.18 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. மொத்தமாக உலகளவில் கில்லி பட வசூல் ரூ.26 கோடியை தாண்டி உள்ளது.
நாளை மே 1-ந் தேதி விடுமுறை தினம் என்பதால் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.