சாதனை விலைக்கு விற்கப்பட்ட இந்தியன் 2… இதுக்கே இப்படியா?
ஷங்கர் ஒரே நேரத்தில் மூன்று படங்களை இயக்கி வருகிறார். இந்தியன் 2, இந்தியன் 3, கேம் சேஞ்சர் என்பனவாகும்.
இதில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்தியன் 3 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்தியன் 2 வெளியீட்டுக்குப் பிறகு அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்க உள்ளனர்.
ஷங்கர் தெலுங்கில் இயக்கிவரும் கேம் சேஞ்சரின் முதல் பாடல், மார்ச் 27, ராம் சரணின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.
இதனையொட்டி, சமூகவலைதளத்தில் பதிவிட்ட படத்தின் தில் ராஜு, இன்னும் 5 மாதங்களில் கேம் சேஞ்சர் முழுமையாக உங்களுடையதாகும் என ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தார். இதனால், கேம் சேஞ்சர் வெளியாக இன்னும் 5 மாதங்களாகும் என்பது தெளிவாகிறது.
அதற்கு முன் இந்தியன் 2 படத்தை வெளியிட உள்ளனர். 1996 ல் இந்தியன் வெளியான போது, கர்நாடகாவில் மாபெரும் வெற்றியை பெற்றது. கன்னடத்தில் மொழிமாற்றம் செய்யாமலே அங்கு படம் பல வாரங்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது. இதனால், இந்தியன் 2 படத்தின் திரையரங்கு விநியோக உரிமையை வாங்க போட்டி நிலவியது.
தற்போது இந்தியன் 2 படத்தின் கர்நாடக திரையரங்கு விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. இவர்கள் கன்னடத்தின் முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமாகும்.
இதுவரை வெளியான தமிழ்ப் படங்கள் அனைத்தையும்விட அதிக தொகைக்கு இந்த உரிமை வாங்கப்பட்டுள்ளது. அந்தவகையில், கர்நாடக உரிமை அதிக தொகைக்கு விற்கப்பட்ட தமிழ்ப் படம் என்ற சாதனையை, வெளியாகும் முன்பே, இந்தியன் 2 படைத்துள்ளது. மேலும், பல சாதனைகளை இப்படம் ஏற்படுத்தும் என உறுதியாக நம்பலாம்.