தயாராகின்றது தமிழக வெற்றிக் கழக கொடி… மாநாட்டு எப்போது?

தயாராகின்றது தமிழக வெற்றிக் கழக கொடி… மாநாட்டு எப்போது?
  • PublishedMay 13, 2024

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் கட்சி வளர்ச்சி பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளார்.

2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல்தான் கட்சியின் இலக்கு எனவும் கட்சிக்கு 2 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் எனவும் அறிக்கை வாயிலாக விஜய் தெரிவித்திருந்தார்.

இதையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு செயலி மூலம் நடைபெற்று வருகிறது. இதுவரை கட்சியில் புதிய உறுப்பினர்களாக 80 லட்சம் பேர் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘தி கோட்’ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. படப்பிடிப்பு இடைவெளியில் கட்சி வளர்ச்சி பற்றி நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி வரும் விஜய் தனது பிறந்த நாளை அடுத்த மாதம் 22-ந்தேதி கொண்டாட இருக்கிறார்.

இதையொட்டி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. மதுரை அல்லது திருச்சியில் பிரமாண்டமாக நடத்துவதற்கு ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் மாநாடு நடைபெற இருக்கும் இடத்தை நிர்வாகிகள் சென்று பார்வையிட்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கட்சியின் முதல் அரசியல் மாநாடாக நடைபெறுவதால் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாநாட்டில் கோடிக்கணக்கான தொண்டர்கள் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இருந்து கலந்து கொள்ள இருக்கின்றனர்.

மாநாட்டில் கட்சிக் கொடி அறிமுகப்படுத்தப்பட இருப்பதால் கொடி வடிவமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கட்சியில் புதிதாக திரையுலக நடிகர், நடிகைகள் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் இணைய இருக்கின்றனர்.

மாநாடு நடைபெற இருப்பதை தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் சமூக வலைதளத்தில் விரைவில் மாநாடு…. என ஆர்வத்தோடு பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *