அயோத்தி கதை சர்ச்சை; மௌனம் கலைத்த நடிகர் சசிக்குமார்

அயோத்தி கதை சர்ச்சை; மௌனம் கலைத்த நடிகர் சசிக்குமார்
  • PublishedMarch 8, 2023

அயோத்தி படத்தின் கதை குறித்த சர்ச்சை எழுந்திருக்கும் சூழலில் அதுதொடர்பாக நடிகரும், இயக்குநருமான சசிக்குமார் விளக்கமளித்திருக்கிறார்.

இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சசிக்குமார். சுப்ரமணியபுரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். அதன் பிறகு ஈசன் படத்தை இயக்கிவர் தொடர்ந்து படங்கள் இயக்காமல் நடிப்பில் கவனம் செலுத்தினார். அதன்படி பல படங்களில் ஹீரோவாக நடித்துவருகிறார்.

சசிக்குமார் சமீபத்தில் நடித்த படம் அயோத்தி. அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கியிருக்கும் இப்படத்தில் குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். அயோத்தியிலிருந்து தமிழ்நாட்டுக்கு ஒரு குடும்பம் வரும்போது ஏற்படும் விபத்தில் தாய் இறந்துவிட அந்த குடும்பத்துக்கு இரண்டு பேர் உதவி செய்வதை அடிப்படையாக வைத்து படமாக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் படத்துக்கு பெரும் வரவேற்பு கொடுத்துள்ளனர்.

சூழல் இப்படி இருக்க அயோத்தி படத்தின் கதை யாருடையது என்ற சர்ச்சை எழுந்திருக்கிறது. படத்துக்கான கதை தன்னுடையது என எஸ்.ராமகிருஷ்ணன் கூற; படத்தின் கதை தன்னுடையது என மாதவராஜ் தெரிவித்திருக்கிறார். மேலும் தன்னுடைய கதையிலிருந்தும் சிலவற்றை எடுத்திருக்கிறார்கள் எனவும், மூலக்கதை எழுதிய மாதவராஜுக்கு சேர வேண்டியதை கொடுக்க வேண்டும் எனவும் எழுத்தாளர் நரனும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்நிலையில் தஞ்சாவூரில் நடந்துவரும் நந்தன் படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள வந்த சசிக்குமார் அயோத்தி படத்தை திரையரங்கில் மக்களோடு அமர்ந்து பார்த்தார். அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சாதி, மதம் தாண்டி மனிதம்தான் முக்கியம். மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற விஷயம் இதில் சொல்லப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் நடக்கின்ற எல்லோரும் கடந்து வந்துள்ள செய்தியைத்தான் இந்தப் படத்தில் சொல்லி இருக்கிறோம்.

தமிழர்களாகிய நாம் வட மாநிலத்தவர்களுக்கு உதவி செய்துகொண்டிருக்கிறோம். அதைத்தான் இந்தப் படத்திலும் சொல்லியிருக்கிறோம். இந்தக் கதையானது எல்லோரது வாழ்க்கையிலும் நடக்க்கூடிய ரு விஷயம்தான். அயோத்தி என்பது எல்லோரும் கடந்து வந்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் வருவது போன்று துபாயிலும் ஒரு நண்பர் இறந்தவர்களை அடக்கம் செய்வதை சமூக சேவையாக செய்துவருகிறார். அதேபோல் மதுரையிலும் ஒருவர் அதனை சமூக சேவையாக செய்துவருகிறார். எல்லோரும் வாழ்க்கையில் கடந்து வந்த விஷயம்தான் இது” என்றார்.

முன்னதாக இந்த சர்ச்சை குறித்து இயக்குநர் மந்திரமூர்த்தி தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘நான் எழுதிய கதைக்கு நிறைய பட்ஜெட் தேவைப்பட்டது. முதல் பட இயக்குநர் ஒருவரை நம்பி பெரிய பட்ஜெட்டை யாரும் தரமாட்டார்கள். எனவே ஒரு மீடிய பட்ஜெட் படம் செய்ய முடிவெடுத்து அதற்கான கதையை தேடினேன். அப்போதுதான் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனை சந்தித்து கதை கேட்டேன். அந்த சமயத்தில் அவர் என்னிடம் பல கதைகளை சொன்னார். ஆனால் இந்தக் கதையே எனக்கு பிடித்திருந்தது’ என குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *