5 நாட்களில் 50 கோடி வசூல்… பட்டையை கிளப்பும் ஃபகத் பாசிலின் ஆவேஷம்
நடிகர் ஃபகத் பாசில், புதுமுகங்கள் மிதுன் ஜெய்சங்கர், ஹிப்ஸ்டர், ரோஷன் ஷானவாஸ் ஆகியோருடன் களமிறங்கியுள்ளது ஆவேஷம் படம்.
பெங்களூருவின் தாதாவாக இதுவரை இல்லாத பாடி லேங்குவேஜுடன் இந்தப் படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார் ஃபகத் பாசில்.
கேரளாவை சேர்ந்த மூன்று இளைஞர்கள், பெங்களூருவில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சேர, அங்கு ராகிங் என்ற பெயரால் சீனியர் கேங்கால் அடித்து துன்புறுத்தப்படுகின்றனர். இதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் பெங்களூருவில் தாதாவாக இருக்கும் ஃபகத் பாசிலின் நட்பை பெறுகின்றனர். தொடர்ந்து அவர்களின் எண்ணம் நிறைவேறியதா என்பதாக படத்தின் கதைக்களம் காணப்படுகிறது.
சமீபத்திய மலையாளப் படங்கள் தமிழ் ரசிகர்களை கவரும்வகையில் அமைந்து வருகிறது. அந்த பட்டியலில் அடுத்ததாக இணைந்துள்ளது ஃபகத் பாசில் லீட் கேரக்டரில் நடித்துள்ள ஆவேஷம்.
இதேபோல ரெட்டி என்ற கேரக்டரில் நடித்துள்ள மன்சூர் அலிகானும் ஸ்வீட் சர்ப்ரைஸ். இந்நிலையில் படம் கடந்த 5 நாட்களில் 50 கோடி ரூபாய்களை தாண்டி இந்தப் படம் வசூலித்துள்ளது.
முன்னதாக பெண் கேரக்டர் இல்லாமல் ரோமாஞ்சம் என்ற படத்தை வெற்றிப்படமாக கொடுத்திருந்த ஜிது மாதவன், இந்தப் படத்திலும் அதே டெக்னிக்கை பயன்படுத்தியுள்ளார். படத்தின் மற்றொரு பலமாக சுஷின் ஷ்யாமின் இசையமைப்பும் இணைந்துக் கொள்கிறது.
க்ளைமேக்சின்போது ஃபகத் பாசிலின் ஆவேசமான நடிப்பு, சில துணை கேரக்டர்களின் அதிரடி என்ட்ரி, அம்மா சென்டிமெண்ட், ரங்காவின் ப்ளாஷ்பேக் காட்சிகள் என இந்தப் படத்தில் கொண்டாடுவதற்கு அதிகமான விஷயங்கள் இருந்தாலும், சில இடங்களில் நகர முடியாமல் திரைக்கதை தவிப்பதை தவிர்த்திருக்கலாம் என்ற விமர்சனத்தையும் படம் பெற்றுள்ளது.