சின்னத்திரை நாயகிக்கு காலில் ஏற்பட்ட திடீர் காயம்
தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் கனிகா. இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து ஆட்டோகிராப் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அஜித் குமாருடன் இவர் இணைந்து நடித்த வரலாறு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
பெரும்பாலும் மலையாள சினிமாவில் அதிகமான திரைப்படங்களில் நடித்திருந்த இவர் மோகன்லால், மம்முட்டி மற்றும் ஜெயராம் போன்ற நடிகர்களுடன் பல வெற்றி படங்களில் நடித்தவர். நடிகை கனிகா 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகும் மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இவர் சிறிது காலம் தனது நடிப்பு பணிகளில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
அதன் பிறகு தங்க வேட்டை என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார் கனிகா. அதனைத் தொடர்ந்து திருவிளையாடல் தொலைக்காட்சி தொடரில் நடித்தார். இதையடுத்து தற்போது கோலங்கள் சீரியலை இயக்கிய திருச்செல்வம் இயக்கத்தில் எதிர்நீச்சல் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். இந்தத் தொடரில் இவரது கதாபாத்திரமான ஈஸ்வரி என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. நடிகை கனிகா அப்பாவி மனைவி கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளார்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் காலில் பெரிய கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றி இருக்கிறார் கனிகா. மேலும் அந்தப் பதிவில், “இந்தப் பெரிய கட்டுடன் நடக்க பழக வேண்டும். ஒரு வாரத்தை வெற்றிகரமாக கடந்து விட்டேன் இன்னும் நான்கு வாரங்களை கடக்க வேண்டும்.” என பதிவிட்டு இருக்கிறார். அந்தப் பதிவில் ரசிகர்கள் பலரும் நீங்கள் விரைவில் குணமடைந்து நலமுடன் வரவேண்டும் என அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.