பிரித்விராஜின் 16 ஆண்டு கால தவம்… ஆடுஜீவிதம் படம் எப்படி இருக்கு?
சுமார் 16 ஆண்டுகள் உழைப்புக்கு பின்னர் பிரித்விராஜ் நடித்துள்ள ஆடுஜீவிதம் என்ற திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்த விமர்சனங்கள சமூக வலைதளங்களில் அதிகம் படிக்கப்பட்டு வருகிறது.
மலையாளத்தில் வெளியான மஞ்சுமல் பாய்ஸ் என்ற திரைப்படம் தமிழ்நாட்டிலும் யாரும் எதிர்பார்த்திராத வசூலை அள்ளிக் குவித்தது.
தமிழ் நாட்டில் மட்டும் இந்த படம் ரூ. 52 கோடி அளவுக்கு வசூலித்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆடு ஜீவிதம் என்ற படம் இன்று வெளியாகியுள்ளது.
சவூதி அரேபியாவுக்கு வேலைக்காக செல்லும் நஜீப் என்ற மலையாளிக்கு அங்கு அவர் எதிர்பார்த்த வேலை வழங்கப்படாமல் பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் வலை அளிக்கப்படுகிறது. அங்கு பல கொடுமைகளில் சிக்கிய நஜீப் எப்படி தப்பித்து வருகிறார் என்பதே படத்தின் கதை. மலையாளத்தில் எழுதப்பட்ட ஆடுஜீவிதம் என்ற நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு இந்த நாவல் வெளிவந்த நிலையில் அதனை படமாக்குவதற்காக 2010 ஆம் ஆண்டு இயக்குனர் ப்ளஸி மற்றும் நடிகர் பிருத்விராஜ் ஆகியோர் அதற்கான பணிகளை ஆரம்பித்தனர். கொரோனா உள்பட பல இடையூறுகளை தாண்டி படம் முழுமை பெற்று இன்று வெளிவந்துள்ளது.
ஆடுஜீவிதம் படத்தின் ரிலீசை அதிகம் எதிர்பார்த்த மலையாள சினிமா ரசிகர்கள் இன்று அதனை கொண்டாடி வருகின்றனர். இன்று காலை முதலே இந்த படத்தின் காட்சிகள் அங்கு ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொருத்தளவில் நகரங்களில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனாலும் கமர்ஷியல் சினிமா ரசிகர்களுக்கு ஆடுஜீவிதம் அதிக ஈர்ப்பை ஏற்படுத்தாது என்றும், ஆர்ட் சினிமா மற்றும் உலகத் தரம் வாய்ந்த படங்களை பார்க்க விரும்புவோரை இந்த படம் நிச்சயம் கவரும் என்றும் படத்தை பார்த்தவர்கள் விமர்சித்துள்ளனர். துயரம் நிறைந்த வாழ்க்கை படமாக நகரும் அதே வேளையில் சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இருப்பதாக சிலர் குறிப்பிட்டுள்ளனர்