சைஃப் அலிகானின் ராஜ அரண்மனை உட்பட 15,000 கோடி சொத்து பறிபோகும் அபாயம்…

சைஃப் அலிகானின் ராஜ அரண்மனை உட்பட 15,000 கோடி சொத்து  பறிபோகும் அபாயம்…
  • PublishedJanuary 22, 2025

பாலிவுட்டின் பிரபல நடிகரான சைஃப் அலிகான் தான் வாழ்ந்த ராஜ அரண்மனை உட்பட ரூ.15,000 கோடி சொத்துக்களை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சைஃப் அலிகான், பட்டோடி மற்றும் போபால் அரச குடும்பத்தின் வாரிசு. மத்திய பிரதேச தலைநகரான போபால் நவாப் குடும்பத்தின் வாரிசுகளில் ஒருவர் மன்சூர் அலிகான் பட்டோடி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன். இவருக்கும், பிரபல நடிகை சர்மிளா தாகூருக்கும் பிறந்தவர் தான் நடிகர் சைஃப் அலிகான்.

பட்டோடி குடும்பத்துக்கு போபாலில் அரண்மனை, கட்டிடங்கள், நிலங்கள் என ரூ.15000 கோடி அளவுக்கு சொத்துக்கள் இருக்கின்றன. சைஃப் அலிகான் தனது குழந்தை பருவத்தை அதிகமாக கழித்த போபால் அரண்மனையும் இதில் அடக்கம்.

பட்டோடி குடும்பத்தின் பரம்பரை பற்றி உங்களுக்கு தெரியுமா?

போபாலின் கடைசி நவாப் ஹமீதுல்லா கான். அவருக்கு மூன்று மகள்கள் இருந்தனர். மூத்த மகள் அபிதா சுல்தான், இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை அடுத்து 1950இல் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தார். இதனால் அவரின் இந்திய குடியுரிமையும் பறிபோனது.

இரண்டாவது மகள் சஜிதா சுல்தான், இந்தியாவில் தங்கி கிரிக்கெட் வீரர் இப்திகார் அலி கான் பட்டோடியை திருமணம் செய்துகொண்டார். அபிதா இல்லாததால், சஜிதா போபால் நவாப் குடும்பத்தின் சட்டப்பூர்வ வாரிசானார். இந்த சஜிதா சுல்தானின் மகன் மன்சூர் அலிகான் பட்டோடி. அதாவது, சைஃப் அலிகானின் தந்தை. அந்தவகையில், சைஃப் அலிகான் போபால் ராஜ குடும்பத்தின் வாரிசாக உள்ளார்.

இதற்கிடையே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானுக்கு சென்றவர்களின் சொத்துகளை எதிரி சொத்துக்களாக கருதி அரசாங்கம் கையகப்படுத்த முடியும். எதிரி சொத்து என அறிவிக்கப்பட்டால் அந்த சொத்துக்கள் மத்திய அரசுக்கு செல்லும். இந்த அடிப்படையில், அபிதா சுல்தான் பாகிஸ்தான் குடியேறியதை காரணம் காட்டி, போபால் அரச குடும்ப சொத்துக்கள் அனைத்தையும் எதிரி சொத்துகளாக கடந்த 2014ல் அறிவித்த மத்திய அரசு, இதில் சஜிதா சுல்தான் சொத்துகளையும் கொண்டு வர நினைத்தது.

இதனை எதிர்த்து தான் 2015ல் மத்திய பிரதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார் சைஃப் அலிகான். இந்த மனுவை ஏற்றுக்கொண்டு மத்திய அரசுக்கு தடை விதித்த நீதிமன்றம், 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதே மனுவை தள்ளுபடியும் செய்தது. காரணம், 2016ல் மத்திய அரசு பிறப்பித்த அரசாணை.

அந்த அரசாணையில் போபாலில் உள்ள நவாப் சொத்துகள் மீது வாரிசுகள் உரிமை கொண்டாட முடியாது என்று அறிவித்தது.

இந்த அரசாணை அடிப்படையில், நவாப் சொத்துக்களை கைப்பற்ற மத்திய அரசுக்கு விதித்திருந்த தடையை நீக்கிய நீதிமன்றம், சைஃப் அலிகான் வேண்டும் என்றால், 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்தது.

நீதிமன்றம் கெடு விதித்த அந்த 30 நாட்கள் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. எனினும், சைஃப் அலிகான் ரூ.15000 கோடி சொத்துகளுக்கு உரிமை கோரி எந்த மேல்முறையீடும் இதுவரை செய்யவில்லை.

இதனால், அந்த சொத்துக்களை அரசாங்கம் எடுத்துக்கொள்ள வாய்ப்பு உருவாகியுள்ளது. ஓரிரு நாட்களில் அரசு நவாப்பின் சொத்துக்களை எடுத்துக்கொள்ளும் எனத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *