‘அவரின் இசைதான் என்னுடைய வாழ்க்கை பயணத்தில் நிறைந்துள்ளது’ – நாக சைதன்யா நெகிழ்ச்சி
நடிகர் நாகசைதன்யா இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்தது குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் இசையை முற்றிலும் மாற்றியவர் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளியில் ஆரம்பித்த அவரது பயணம் இப்போதுவரை ரசிகர்களை சாந்தப்படுத்திவருகிறது. எந்த காலத்திற்கும் பொருந்திப்போகக்கூடிய இசையை கொடுக்கூடிய இளையராஜாவுக்கு இன்றுவரை பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் இசையமைத்திருக்கும் இளையராஜா இதுவரை 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்திருக்கிறார். இருப்பினும் இளையராஜா ஏற்கனவே அமைத்த இசை போல் மற்றொரு இசை இருக்காது. இது பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. அதேபோல் எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் இளையராஜாவின் தாக்கம் இல்லாமல் இசையமைக்க முடியாது என்ற நிலையே நீடிக்கிறது.
தொடர்ந்து இசையமைத்துவரும் இளையராஜா சமீபத்தில் விடுதலை படத்துக்கு இசையமைத்திருக்கிறார். அவர் இசையமைப்பில் உருவான உன்னோடு நடந்தா பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. பாடலை பாடலாசிரியர் சுகா எழுதியிருந்தார். பாடலை கேட்ட ரசிகர்கள், இந்தப் பாடலின் மூலம் தான் ஒரு ஜீனியஸ் என்பதை இளையராஜா மீண்டும் நிரூபித்திருக்கிறார் என புகழ் மாலை சூட்டியிருக்கின்றனர்.
இதற்கிடையே வெங்கட் பிரபு தெலுங்கில் நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். அரவிந்த் சாமி வில்லனாக நடிக்கிறார். மேலும், ராம்கி உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜாவும், இளையராஜாவும் சேர்ந்து இசையமைக்கின்றனர். படமானது மே மாதம் திரைக்கு வரவிருக்கிறது.
இந்நிலையில் கஸ்டடி படத்தின் ஹீரோ நாக சைதன்யா இளையராஜாவை நேரில் சந்தித்தார். அதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “மேஸ்ட்ரோ இளையராஜாவை சந்தித்தபோது எனது முகத்தில் மிகப்பெரிய ஆனந்தம். அவருடைய இசை என்னுடைய வாழ்க்கை பயணத்தில் நிறைந்திருக்கிறது. அதிகம் முறை அவரது இசையை மனதில் வைத்து நடித்துள்ளேன். தற்போது என்னுடைய கஸ்டடி படத்திற்கு இசையமைத்துள்ளார். உண்மையில் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்” என குறிப்பிட்டுள்ளார்.