பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானையே மிஞ்சிய அல்லு அர்ஜுன்
‘ஐகானிக் ஸ்டார்’ என தெலுங்கு ரசிகர்களால் அழைக்கப்படுபவர் அல்லு அர்ஜுன். முழுக்க முழுக்க தெலுங்கு திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவரை, பான் இந்தியா ஸ்டாராக உருவெடுக்க வைத்தது ‘புஷ்பா’ திரைப்படம் தான்.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் செம்மர கடத்தலை மையமாக வைத்து எழுதப்பட்ட திரைக்கதையில், அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்க ராஷ்மிகா கதாநாயகியாக நடித்திருந்தார்.
2021 ஆம் ஆண்டு ‘புஷ்பா தி ரைஸ்’ என்கிற பெயரில் வெளியான இந்த படம், விமர்சனங்களை பெற்ற போதும் வசூலில் மாஸ் காட்டியது.
இந்த படம் தெலுங்கு திரை உலக ரசிகர்களை மட்டும் இன்றி, பாலிவுட், கோலிவுட், என மற்ற மொழி ரசிகர்களையும் அதிகம் கவர்ந்தது. புஷ்பா படத்தின் முதல் பாகம் ரூபாய் 350 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த நிலையில், இந்த படத்தில் நடித்ததற்காக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருதும் கிடைத்தது .
மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக ஸ்ரீவள்ளி என்கிற கதாபாத்திரத்தில் நடித்த ரஷ்மிகா மந்தனா பான் இந்தியா நடிகையாக மாறினார்.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில்… இந்த படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட ‘புஷ்பா தி ரூல்’ என்கிற படத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வந்தார்.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இந்த படத்தின் படப்பிடிப்பு கடுமையான சூழ்நிலைகளை கடந்து எடுக்கப்பட்ட நிலையில், ஒருவழியாக டிசம்பர் 5ஆம் தேதி அதாவது நேற்று உலகம் முழுவதும் சுமார் 12,000 திரையரங்குகளில் வெளியானது.
வழக்கம்போல் புஷ்பா 2 படத்தின் இரண்டாவது பாகத்திற்கும் கலவையான விமர்சனங்களே கிடைத்தாலும் வசூல் பலமாக இருந்தது. ப்ரீ புக்கினிலேயே 100 கோடி வசூலை தட்டி தூக்கிய புஷ்பா, முதல் நாளில் உலகம் முழுவதும் ரூபாய் 175 கோடி வசூலித்ததாக தகவல்கள் வெளியாக்கின.
இது ஒரு புறம் இருக்க, தற்போது புஷ்பா 2 திரைப்படம் ஹிந்தியில் ரூ.1200 கோடிக்கும் மேல் வசூல் செய்த ‘ஜவான்’ படத்தின் சாதனையை முறியடித்துள்ள தகவல் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
ஹிந்தியில் நேற்று வெளியான ‘புஷ்பா தி ரூல்’ திரைப்படம் முதல் நாளில் ஹிந்தியில் மட்டும் ரூபாய் 72 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு ஜவான் திரைப்படம் முதல் நாளில் ரூபாய் 65.50 கோடி வசூல் செய்த நிலையில்… அதனை முறியடித்துள்ளது ‘புஷ்பா 2’ திரைப்படம். இந்த சாதனையின் மூலம் அல்லு அர்ஜுன் ரியல் பான் இந்தியா ஸ்டாராக மின்ன துவங்கி விட்டார் என அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.