பாடகி பாம்பே ஜெயஶ்ரீயின் உடல்நலம் குறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பாடகி பாம்பே ஜெயஶ்ரீயின் உடல்நலம் குறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
  • PublishedMarch 25, 2023

கோமா நிலைக்கு சென்ற பாடகி பாம்பே ஜெயஶ்ரீயின் உடல்நலம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் பாடகியாகவும் புகழ்பெற்ற கர்நாடக இசை கலைஞராகவும் இருந்து வருபவர் பாம்பே ஜெயஸ்ரீ. இவர் கர்நாடக இசை மட்டுமல்லாமல் யுவன் சங்கர் ராஜா, ஏ ஆர் ரகுமான், இளையராஜா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோரின் இசையில் நிறைய படங்களில் பாடல்களை பாடி இருக்கிறார்.

கர்நாடக இசை உலகில் மிகப்பெரிய விருதாக கருதப்படும் சென்னை மியூசிக் அகாடமி வழங்குகின்ற சங்கீத கலாநிதி விருது பாம்பே ஜெயஸ்ரீக்கு கடந்த திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. இத்தகைய நிலையில், இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து சென்ற பாம்பே ஜெயஸ்ரீ திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு மயங்கிய நிலையில் சுயநினைவை இழந்தவாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை இங்கிலாந்தில் அவருடைய இசை கச்சேரி நடக்க இருந்தது. அவருடைய மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு கோமா நிலையில் இருப்பதாக கூறப்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் அவரது உடல்நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தி அவருடைய ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

இதனிடையே பாம்பே ஜெயஸ்ரீ குடும்பத்தினர் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பின்படி, “பாம்பே ஜெயஸ்ரீக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவருக்கு ஓரிரு நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது. உடல்நலம் குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகும் உண்மையற்ற தகவல்களை யாரும் பொருட்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.” என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் பாம்பே ஜெயஸ்ரீ அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘பாம்பே ஜெயஸ்ரீ இங்கிலாந்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சரியான நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது உடல்நிலை சீராக உள்ளதால், அவருக்கு ஓரிரு நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது. இந்த காலகட்டத்தில் பாம்பே ஜெயஸ்ரீயின் குடும்பம் தனியுரிமை மற்றும் உங்கள் ஆதரவைக் கோருகிறது’ என தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *