முடிவுக்கு வருகின்றதா பாக்கியலட்சுமி சீரியல்…

முடிவுக்கு வருகின்றதா பாக்கியலட்சுமி சீரியல்…
  • PublishedJune 3, 2023

விஜய் டிவியின் முக்கியமான தொடராக மாறியுள்ள பாக்கியலட்சுமி தொடர் விறுவிறுப்பான எபிசோட்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடரான பாக்கியலட்சுமி, குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டு அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை ஒளிபரப்பு செய்து வருகிறது.

இந்தத் தொடர் பெங்காலியில் மிகுந்த வரவேற்பை பெற்ற ஸ்ரீமோயி என்ற தொடரை ரீமேக் செய்து ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ் ரசிகர்களுக்கு தகுந்தபடி இந்தத் தொடரில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்தத் தொடரில் கணவனுக்கும் மாமியார் -மாமனாருக்கு அடங்கிய மருமகளாகவும் அமைதியான கேரக்டரில் பாக்கியா காணப்பட்டார்.

ஆனால் ராதிகாவுடனான தன்னுடைய கணவரின் உறவு குறித்து தெரிந்தவுடன், தன்னை ஏமாற்றி தன்னிடம் இருந்து தன்னுடைய கணவன் வாங்க முயன்ற விவாகரத்தை, தானே முன்வந்து கொடுக்கிறார் பாக்கியா. தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறும் கோபி, ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து, தன்னுடைய வாழ்க்கையை துவங்குகிறார். ஆனால் அவர் நினைத்ததுபோல அவரது வாழ்க்கை அமையவில்லை. நித்தம் ஒரு சண்டை என கழிகிறது.

இதனால் விரக்தியடையும் கோபி, குடிப்பழக்கத்திற்கும் ஆளாகிறார். இதனால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு, அவர் பாக்கியா வீட்டில் தங்க, ராதிகாவும் அங்கே வர, தொடர்ந்து அவரது பெண் மயூவும் அந்த வீட்டிற்கே வருகிறார். இதனால் குடும்பத்தில் மிகவும் அதிகமான குழப்பங்கள் ஏற்படுகின்றன. அவர்களை அந்த வீட்டை விட்டு துரத்த ஈஸ்வரி முற்படுகிறார். இதனாலும் சண்டை சச்சரவுகள் ஏற்படுகின்றன. இதனால் பாக்கியாவிற்கும் மனஉளைச்சல் ஏற்படுகிறது.

இதனிடையே, பாக்கியாவிற்கு இங்கிலீஷ் வகுப்பில் பழனிச்சாமி என்பவர் அறிமுகமாகிறார். அவருடன் பாக்கியா நட்புடன் பழக, அதை சந்தேகக் கண் கொண்டு கோபி பார்க்கிறார். இதை குடும்பத்தில் சொல்லி, தன்னுடைய மகன்களின் கோபத்திற்கும் உள்ளாகிறார். மேலும் ராதிகாவிடம் அவருக்கு இருக்கும் பயத்தை வைத்து குடும்பத்தினர் அவரை கலாய்க்கவும் செய்கின்றனர். கோபி ஒரு காமெடி பீஸாக மாறுகிறார்.

இந்நிலையில், மயூவிற்கும், இனியாவிற்கும் பாடம் சொல்லிக் கொடுப்பதிலும் குழப்பம் ஏற்பட்டு, ராதிகாவிடம் அடி வாங்குகிறார் கோபி. இது என்னடா புதிய குழப்பம் என்று அவர் திணறுவது அடுத்தடுத்த எபிசோட்களில் காட்டப்படுகிறது. இந்நிலையில், இந்தத் தொடர் விரைவில் நிறைவுக்கு வரவுள்ளதாக தற்போது இணையதளத்தில் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. இணையதளத்தில் வெளியாகியுள்ள புதிய புகைப்படத்தில் கோபி மற்றும் பாக்கியா ஒன்றாக நிற்க, சுபம் என்று போடப்பட்டுள்ளது.

இதையடுத்து பாக்கியலட்சுமி தொடர் விரைவில் நிறைவடைகிறதா என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முதன்மை தொடரான பாக்கியலட்சுமியை அவ்வளவு சீக்கிரம் நிறைவுக்கு கொண்டு வர மாட்டார்கள் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஒருசிலர், வாவ் சூப்பர், நல்ல விஷயம்தான் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். இதில் எது உண்மையாக இருக்கும் என்பதை விரைவில் தெரிந்துக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *