விஜயகாந்த்திற்கு பாராட்டு விழா.. விஷால் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

விஜயகாந்த்திற்கு பாராட்டு விழா.. விஷால் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
  • PublishedMarch 8, 2023

நடிகர் சங்கத்திற்கு விஜயகாந்த் அளித்த பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக அவருக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்று நடிகர் விஷால் தெரிவித்திருக்கிறார்.

தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். கேப்டன் விஜயகாந்த் என ரசிகர்களால் அழைக்கப்பட்ட அவர் ரஜினி, கமல் உச்சத்தில் இருந்தபோது திரைத்துறைக்குள் நுழைந்து தனது தடத்தை பதித்தவர். அதேபோல் கருணாநிதி, ஜெயலலிதா ஆக்டிவ்வாக அரசியலில் இருந்தபோது தனிக்கட்சி ஆரம்பித்தவர்ம் விஜயகாந்த். இப்போது உடல்நலம் குன்றி ஓய்வில் இருக்கிறார்.

நடிகராக மட்டுமின்றி நடிகர் சங்க தலைவராகவும் விஜயகாந்த் இருந்தவர். அவர் தலைவராக இருந்தபோதுதான் நடிகர் சங்கத்திற்கு கடனை முழுதாக அடைத்தவர். அதேபோல் அவர் நடிகர் சங்க தலைவரிலிருந்து விலகும்போது கூடுதலாக பணத்தை சேர்த்து வைத்தும் சென்றவர். தற்போது நடிகர் சங்கம் ஓரளவுக்கு நல்ல நிலைமையில் இருக்கிறதென்றால் அதற்கு முழு காரணம் விஜயகாந்த்தான் என பலர் கூறுவதுண்டு.

நடிகர் சங்கத்தை கடனை அடைப்பதற்காக வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு திட்டமிட்டார் விஜயகாந்த். இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல் ஹாசனில் தொடங்கி அப்போது வளர்ந்துவரும் நடிகர்கள்வரை பலரையும் அழைத்துக்கொண்டு சிங்கப்பூர், மலேசியாவில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினார். சிங்கப்பூரில் நடந்த கலை நிகழ்ச்சி முடிந்த பிறகு ஏஜென்சி ஒன்று 70 லட்சம் ரூபாய் (அப்போதைய மதிப்பில் 1 கோடி) ஏமாற்ற பார்த்தது. அதனை தெரிந்துகொண்ட விஜயகாந்த், ஹோட்டலில் வைத்து பணத்தை ஏமாற்ற முயன்ற ஏஜென்சிக்காரரை அடித்து பணத்தை மீண்டும் பெற்றுக்கொடுத்தார். இப்படி நடிகர் சங்கத்துக்காக தன்னால் முடிந்த அளவு அனைத்தையும் செய்திருக்கிறார் விஜயகாந்த்.

இந்நிலையில் நடிகர் விஷால் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘நடிகர் சங்கத்துக்கான புதிய கட்டடம் இன்னும் ஒரு வருடத்துக்குள் முடிவடையும். நடிகர் சங்கம் கட்டடம் கட்டுவதற்கான முயற்சியில் விஜயகாந்தின் பங்களிப்பு மிகப்பெரியது. நடிகர் சங்கத்தின் பத்திரத்தை மீட்ட அவரது உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் வகையில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்படும்’ என்று தெரிவித்தார். அவரது இந்த அறிவிப்பு விஜயகாந்த் ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

முன்னதாக, கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைமையிலான விஷால் அணி வெற்றி பெற்றது. தேர்தலில் வெற்றி பெற்றால் நடிகர் சங்க கட்டடம் கட்டப்படும் என விஷால் அணி வாக்குறுதி கொடுத்திருந்தது. ஆனால் இன்னமும் கட்டி முடிக்கப்படவில்லை.

இதற்கிடையே ரஜினியும், கமலும் செங்கல் எடுத்துக்கொடுக்க நடிகர் சங்க கட்டடம் கட்டும் பணி தொடங்கியது. அதேசமயம், 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டன. நீதிமன்ற தீர்ப்பின்படி மீண்டும் வாக்குகள் எண்ணப்பட்டு விஷால் அணியே வெற்றி பெற்றது. அதனையடுத்து நடந்த செயற்குழு கூட்டத்தில் கட்டட பணிகள் 40 சதவீதம் முடிக்கப்படாமல் இருக்கிறது. எனவே வங்கியில் கடன் பெற்றும், நடிகர், நடிகைகளிடம் நிதி திரட்டியும் இன்னும் மூன்று மாதங்களுக்கு கட்டட வேலை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *