ஸ்ரீலங்காவில் இருந்து தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த 5 பிரபலங்கள்
நாடு,மொழி, இனம், மதம் இவற்றைக் கடந்து நிற்பது காதல் மட்டும் அல்ல.. கலையும் தான். கலையின் மீது தங்களுக்கு இருக்கும் தீரா தாகத்தால் திரை கடல் தாண்டியும் வாய்ப்பு தேடி வந்தனர் லங்காவாசிகள். ஆம் இலங்கையில் இருந்து தமிழகம் வந்து கலை சேவை புரிந்து தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த 5 பிரபலங்களை பற்றி காணலாம்.
ராதிகா:
எம் ஆர் ராதாவின் மகள் என்ற அடையாளத்தோடு அறிமுகப்படுத்தப்பட்ட ராதிகா, பாரதிராஜாவின் இயக்கத்தில் கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தில் நடிக்க இலங்கையிலுள்ள கொழும்புவிலிருந்து அழைத்து வரப்பட்டார். எம் ஆர் ராதா, தன் மகள் ராதிகாவிற்கு தனக்குப் பின் இருக்கும் திரை வாரிசு என்ற முறையில் வெற்றி திலகமிட்டு நடிக்க அனுப்பி வைத்ததாக தகவல்.
சுஜாதா:
கே பாலச்சந்தரின் “அவள் ஒரு தொடர்கதை” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சுஜாதா, கிட்டத்தட்ட மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்து பெயர் பெற்றவர். இவர் இலங்கையில் உள்ள காலோ என்ற இடத்தில் பிறந்து பின் கேரளாவில் தஞ்சமடைந்து மலையாள சினிமாவில் நடித்து வந்ததாகவும், கே பாலச்சந்தரின் அறிமுகத்திற்கு பின்னரே உச்சம் பெற்ற நடிகையாக மாறினார்.
எம்ஜிஆர்:
தமிழ் சினிமாவின் தனிப்பெரும் ஆளுமையும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் பிறப்பிடம் இலங்கையில் உள்ள கண்டியே ஆகும். தந்தையின் பிரிவால் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்த எம்ஜிஆரும் அவரது குடும்பமும் தமிழகத்தில் கும்பகோணத்தில் குடியேறி அங்கே நாடகங்களில் நடித்தார். பின் தமிழ் சினிமாவில் கோலோச்சி “ நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்” என்று தமிழகத்தை ஆட்சி செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
நிரோஷா:
ராதிகாவின் சகோதரியான நிரோஷா மணிரத்தினத்தின் அக்னி நட்சத்திரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்திற்கு பின் பிரபலமான நிரோஷா 90 களின் முன்னணி நடிகர் ராம்கி உடனான காதல் திருமணத்திற்கு பின் திரை துறையில் இருந்து சற்றே விலகி இருந்தார். தற்போது சின்னத்திரை தொடர்களில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.
பூஜா:
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பூஜா கொழும்புவின் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் நடித்து வந்தார். ஜே ஜே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பூஜாவிற்கு பாலாவின் நான் கடவுள் திரைப்படம் நல்லதொரு பேரையும் புகழையும் பெற்றுத் தந்தது.