‘800’ சாதனை படைத்ததற்கு பின்னால் இருந்தது என்ன? முரளிதரன்
என்னுடைய வாழ்க்கையிலிருந்த போராட்டத்தைப் போலத்தான் இந்தப் படத்தை முடிக்கவும் நிறைய போராட வேண்டியிருந்தது என ‘800’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் முத்தையா முரளிதரன் பேசியுள்ளார்.
முத்தையா முரளிதரனின் ‘800’ படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இது தொடர்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், “ஒருமுறை இயக்குநர் வெங்கட்பிரபு என் வீட்டுக்கு வந்தபோது நான் வாங்கிய கோப்பைகளை பார்த்தார். உங்களுக்குத் தெரியும் அவர் கிரிக்கெட் தொடர்பாக ‘சென்னை 28’ படத்தை இயக்கியிருந்தார்.
கோப்பைகளை பார்த்த அவர் என்னிடம், ‘உங்களைப்பற்றி ஒரு பயோபிக் எடுக்கலாமே’ என பரிந்துரைத்தார். அப்போது எனக்கு அதில் விருப்பமில்லை. ஆனால் அங்கிருந்த என்னுடைய மேனேஜர், ‘இந்தப்படம் எடுத்து அதில் வரும் பணத்தை நற்குணம் மன்றத்துக்கு செலவழிக்கலாம்’ என்றார். அதனால் தான் ஒப்புக்கொண்டேன்.
அப்போது தான் இயக்குநர் ஸ்ரீபதியை என்னிடம் அனுப்பி படத்துக்கான கதையை எழுதச்சொன்னார். அவரும் இலங்கை வந்தார். நான் அவரிடம் ஒன்றே ஒன்று தான் சொன்னேன். ‘நீங்கள் கதையை எழுதும்போது எல்லோரிடமும் பேசுங்கள். என்னை பிடித்தவரும் இருக்கிறார்கள், பிடிக்காதவர்களும் இருக்கிறார்கள். அனைவரிடமும் பேசுங்கள்’ என்றேன். அதேபோலத்தான் அவர் கதையை எழுதியிருக்கிறார்.
அப்போது வெங்கட்பிரபு தான் படத்தை இயக்குவதாக இருந்தது. தயாரிப்பாளருக்கும் அவருக்கும் சில பிரச்சினைகள் ஏற்பட்டதால் அவர் விலகி கொண்டார். அதனால் ஸ்ரீபதியிடம் நீங்களே படத்தை இயக்குங்கள் என்றேன். பின்னர் இதில் விஜய்சேதுபதி வந்தார். அதிலும் சில தடங்கல் வந்தது. பின்னர் கோவிட் வந்தது. ஸ்ரீபதியின் விடாமுயற்சியால் தான் படம் இந்த இடத்துக்கு வந்துள்ளது.
என்னுடைய பூர்வீகம் தமிழ்நாடு தான். நாமக்கல் அருகே உள்ள செருக்கலை தான் எங்கள் ஊர். அங்கிருந்ததான் இலங்கைக்கு சென்றோம். என்னுடைய வாழ்க்கையிலிருந்த போராட்டத்தைப் போலத்தான் இந்த படத்துக்கும் நிறைய போராட்டம் இருந்தது. படக்குழு இலங்கை வந்துவிட்டார்கள். ஆனால் அந்த நேரத்தில் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு போராட்டங்கள் வெடித்தன. பயப்படாமல் படத்தை எடுங்கள் என்றேன்.
அதேபோல இலங்கை அரசும் படக்குழுவுக்கு பாதுகாப்பு கொடுத்தது. இலங்கையில் 80 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. டீசல் கூட இல்லாமல் கஷ்டப்பட்டோம். என்னைப்போல பவுலிங் செய்வது மிகவும் கடினம். அதில் 80% அப்படியே படத்தின் ஹீரோ கொண்டுவந்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள்.
எல்லாம் உண்மை சம்பவங்களாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஸ்கிரிப்டில் அப்படியே ஸ்ரீபதி கொண்டு வந்துள்ளார். இன்னும் நான் படம் பார்க்கவில்லை. கிரிக்கெட் படமாக இல்லாமல் ‘800’ நான் சாதனை படைத்ததற்கு பின்னால் இருந்தது என்ன?, என்ன மாதிரியான பிரச்சினைகளோடு விளையாடினேன், என்னால் நாடு எந்த நிலைக்கு வந்தது என்பது குறித்து இந்தப் படத்தில் பேசியுள்ளோம். படம் உங்களுக்கும் பிடிக்கும்” என்றார்.