‘தில்லானா மோகனாம்பாள்’ புகழ் பொன்னுசாமி காலமானார்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பத்மினி நடிப்பில் கடந்த 1967-ம் ஆண்டு வெளியான தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் இசை உலகிற்கு புதிய அத்தியாயத்தை கொடுத்தது.
நாதஸ்வரத்தை ரசிக்காதவர்கள் கூட இந்த படத்தின் காட்சிகளை பார்த்து அந்த இசையை தனக்குள் ஈர்த்து மெய்மறக்கும் அளவுக்கு சென்றனர்.
இந்த திரைப்படத்தில் உண்மையாக நாதஸ்வரம் வாசித்தவர்கள் மதுரையைச் சேர்ந்த நாதஸ்வர வித்வான்களான எம்.பி.என்.சேதுராமன், பொன்னுசாமி சகோதரர்கள் ஆவார்கள்.
கழுத்து நரம்புகள் புடைக்க நாதஸ்வரத்தை இசைப்பது போன்று நடிகர் சிவாஜிகணேசன் நடித்தபோதிலும், அதன் பின்னணியில் இருந்தது இந்த இசை சகோதாரர்கள் என்பதை மறுக்கமுடியாது.
9 வயதில் பொன்னுசாமி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாதஸ்வரம் வாசித்து தனது இசைப் பயணத்தை தொடங்கினார். அவரது அண்ணன் சேதுராமன் தம்பியின் இசை ஆர்வத்தை உணர்ந்து தனது 11-வது வயதில் அவருடன் கைகோர்த்தார்.
1977-ல் தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருதை வழங்கி கவுரவித்தது. 1997-ல் கிருஷ்ண கான சபாவின் சங்கீதா சூடாமணி விருது, கர்நாடக மாநில அரசின் உயரிய விருதுகள் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வாங்கி குவித்த இந்த இசை சகோதரர்களின் பயணம் தமிழகம் மட்டுமின்றி, மாநிலம் கடந்தும், நாடுகளை கடந்தும் ஒலிக்க தொடங்கியது.
குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, மாலத்தீவு, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இவர்களது நாதஸ்வர இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது என்பதை பல முறை பறைசாற்றி உள்ளனர்.