‘NO” சொன்ன ரஜினி.. களமிறங்கி வெற்றி கண்ட டி.ராஜேந்தர்
டி.ராஜேந்தர் ஒரு பன்முகத்திறமை கொண்ட கலைஞர். 1980-களில் இயக்குனராக மட்டுமின்றி நடிகர், பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என தன்னுடைய படங்களில் ஆல் ரவுண்டராக திகழ்ந்து வந்தார் டி.ராஜேந்தர்.
அடுக்குமொழி வசனம், அடர்ந்த தாடி, சிலிப்பிவிடும் ஹேர்ஸ்டைல் என தனக்கென ஒரு தனி ஸ்டைலை உருவாக்கி அதில் வெற்றியும் கண்டார் டி.ராஜேந்தர்.
அதுமட்டுமின்றி தன்னுடைய படங்களில் துளியும் ஆபாச காட்சிகள் வைக்கமாட்டார். ஹீரோயினை தொட்டு கூட நடிக்க மாட்டார் என அவருக்கென ஒரு தனி பாலிசியும் உண்டு. இதன் காரணமாகவே அவரது படங்களை பேமிலி ஆடியன்ஸ் அதிலும் குறிப்பாக பெண்கள் விரும்பி பார்த்தனர்.
அவர் இயக்கத்தில் வெளிவந்த ஒரு தலை ராகம், தங்கைக்கோர் கீதம், என் தங்கை கல்யாணி, மைதிலி என்னை காதலி, உயிருள்ளவரை உஷா, நெஞ்சில் ஓர் ராகம் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை ருசித்தன.
அப்படி அவர் எடுத்து ஹிட்டான ஒரு படத்திற்கு தன் காதலி பெயரையே படத்தின் தலைப்பாக வைத்திருந்தார் டி.ராஜேந்தர். அந்த படம் தான் உயிருள்ளவரை உஷா. தன் காதலி உஷாவை மனதில் வைத்துதான் இந்த தலைப்பையே வைத்திருக்கிறார்.
அதுமட்டுமின்றி அந்த படத்தில் ரஜினியை ஹீரோவாக நடிக்க வைக்க முடிவு செய்த டி.ராஜேந்தர், அவரை மனதில் வைத்து அப்படத்தின் கதையையும் எழுதி முடித்தார். ஆனால் ரஜினி சில காரணங்களால் அப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டதால், மற்ற ஹீரோக்களை தேடி அலைவதற்கு பதில், தானே ஹீரோவாக முடிவு செய்தார் டி.ராஜேந்தர். அதுமட்டுமின்றி தஞ்சை சினி ஆர்ட்ஸ் என்கிற நிறுவனத்தை தொடங்கி அதன்மூலம் டி.ஆர் தயாரித்த முதல் படமும் இதுதான்.
கோலிவுட்டில் கோலோச்சிய ஹீரோயின்களில் ஒருவரான நளினி ஹீரோயினாக அறிமுகமானதும் இந்த படத்தில் தான். இளையராஜா தொடர்ந்து ஹிட் பாடல்களை கொடுத்து வந்த அந்த காலகட்டத்தில் உயிருள்ளவரை உஷா படத்திற்காக டி.ஆர் இசையமைத்த அனைத்து பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆகின.
பாடல்களை தொடர்ந்து படமும் வெளியாகி அதிரி புதியான வெற்றியை ருசித்தது. இதையடுத்து இப்படம் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி அங்கும் வரவேற்பை பெற்றன.
பின்னர் உயிருள்ளவரை உஷா திரைப்படத்தை இந்தி மற்றும் கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்தனர். அங்கும் படம் வேறலெவல் ஹிட்டானது. அந்த அளவுக்கு டி.ஆரின் கெரியரில் ஒரு கல்ட் கிளாசிக் படமாக உயிருள்ளவரை உஷா இருந்து வருகிறது.