சர்தார் 2 சூட்டிங்கில் 20 அடி உயரத்திலிருந்து விழுந்த சண்டை பயிற்சியாளர் மரணம்
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பின்போது சண்டைப் பயிற்சியாளர் ஏழுமலை 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இது படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் படப்பிடிப்பு உடனே நிறுத்தப்பட்டுள்ளது.
நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு அதாவது 2023ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படம் சர்தார். தண்ணீர் மாஃபியாவை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.
இதில் ஒரு கார்த்தி உளவாளியாக நடித்து கண்ணீர் சிந்தவைத்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டும் இல்லாமல் வசூலில் ரூபாய் நூறு கோடி வசூல் செய்தது.
சர்தார் படத்தின் 2ஆம் பாகம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. கடந்த 12ஆம் தேதி படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. மேலும் 15ஆம் தேதியில் இருந்து படப்பிடிப்பு தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சர்தார் 2படத்தின் படப்பிடிப்பு 15ஆம் தேதியில் தொடங்கியதில் இருந்து மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றுக் கொண்டு இருந்த இந்த படப்பிடிப்பின்போது,
20 அடி உயரத்தில் இருந்து எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாத நிலையில், சண்டைப் பயிற்சியாளர் ஏழுமலை என்பவர் தவறி விழுந்தார்.
20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்ததால் சண்டைப் பயிற்சியாளர் ஏழுமலைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் ஏழுமலையை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
20 அடி உயரத்தில் இருந்து விழுந்ததில் மார்புப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தக்கசிவு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் 17ஆம் தேதி அதாவது இன்று நள்ளிரவு 1.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.
இது தொடர்பாக விருகம்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக விபத்து நடந்தபோது படப்பிடிப்புத் தளத்தில் யார் எல்லாம் இருந்தார்கள்? பாதுகாப்புக்காக என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாராணையில், விபத்து நடைபெற்றபோது, படப்பிடிப்புத் தளத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லை என கூறப்படுகின்றது. மேலும் படப்பிடிப்பு தளத்தில் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்படவில்லை என்பது பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சினிமாவில் பல ஆண்டுகளாக சண்டை பயிற்சியாளராக பணியாற்றி வரும் ஏழுமலை உயிரிழந்த சம்பவம் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உயிரிழந்த சண்டைப் பயிற்சியாளர் ஏழுமலை சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.