அன்று அசிங்கப்படுத்தியவர்கள் முன் சாதித்து காட்டிய தனுஷ்; சொத்து மதிப்பு வெளியானது
நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் இன்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி செய்திகள் வெளியாகி உள்ளன.
தமிழ் சினிமாவில் நடிப்பு அசுரனாக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமின்றி பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என சினிமாவில் ஒரு ஆல் ரவுண்டராக ஜொலித்து வருகிறார்.
தனுஷின் இயற்பெயர் வெங்கடேஷ் பிரபு, சினிமாவுக்காக அவர் தன் பெயரை தனுஷ் என மாற்றி வைத்துக்கொண்டார். அறிமுகமாகும் போது ஒல்லியான உடல் அமைப்புடன், சுமார் மூஞ்சி குமாராக இருந்த தனுஷை பார்த்து இவரெல்லாம் ஹீரோவா என அன்று விமர்சிக்காத ஆளே இல்லை.
அன்று தன்னை விமர்சித்தவர்கள் முன்னிலையில் இன்று தரமான நடிகர் என பெயரெடுத்து அவர்களை வாயடைக்க செய்துள்ளார் தனுஷ்.
கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட், ஹாலிவுட் என கடல் தாண்டி சென்று கலக்கி வருகிறார் தனுஷ். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சினிமாவில் அசுர வளர்ச்சி கண்ட தனுஷ், இன்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
கடந்த 2022ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட தகவலின்படி நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு ரூ.160 கோடியாக இருந்தாலும், அதன்பின் அவரின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டதால் தற்போது அவரின் சொத்து மதிப்பு அசால்டாக ரூ.200 கோடியை தாண்டியிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் தனுஷுக்கு சொந்தமாக சென்னையில் உள்ள ரிச்சான ஏரியாவான போயஸ் கார்டனில் ஒரு மாடர்ன் பங்களா உள்ளது. இந்த பக்கம் சூப்பர்ஸ்டார் வீடு, இந்தப்பக்கம் ஜெயலலிதா வீடு என இரு லெஜண்டுகளின் வீட்டுக்கு மத்தியில் தன்னுடைய கனவு இல்லத்தை கட்டி இருக்கிறார் தனுஷ். அந்த வீட்டில் நீச்சல் குளம், ஜிம், தியேட்டர் என சகல வசதியும் உள்ளது. தனுஷின் அந்த ஆடம்பர பங்களாவின் மதிப்பு ரூ.150 கோடி இருக்குமாம்.
நடிகர் தனுஷிடம் ஜாகுவார் XE, ஃபோர்ட் மஸ்டாங்க், பெண்ட்லி, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், ஆடி A8, மெர்சிடிஸ் பென்ஸ் S-Class போன்ற சொகுசு கார்கள் உள்ளன. பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வரும் தனுஷ் தன்னுடைய சம்பளத்தையும் படத்துக்கு படம் அதிகரித்த வண்ணம் உள்ளார்.
லேட்டஸ்ட் தகவலின்படி அவரின் சமீபத்திய ஹிட் படமான ராயனுக்காக ரூ.50 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறாராம். படத் தயாரிப்பிலும் அவர் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது.