வினோத் என்னை செருப்பால அடிச்ச மாதிரி இருக்கு – மீண்டும் பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்

வினோத் என்னை செருப்பால அடிச்ச மாதிரி இருக்கு – மீண்டும் பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்
  • PublishedAugust 13, 2024

சூரி, அன்னா பென் நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று காலை நடைபெற்றது. அதில், தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களான வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல், மிஷ்கின், ரவிக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்று படத்தை பற்றியும் படத்தில் நடித்த சூரி, அன்னா பென் பற்றியும் தயாரித்த சிவகார்த்திகேயன் பற்றியும் மனமார பாராட்டி பேசியுள்ளனர்.

இதன்போது மிஷ்கின் ஆக்ரோஷமாக பேசியது பரபரப்பை பற்ற வைத்துள்ளது.

கொட்டுக்காளி படத்தை பார்த்த தாக்கத்தில் இருந்து தான் இன்னமும் வெளியே வரவில்லை என வழக்கம் போல தனது பாணியில் கெட்ட வார்த்தையை எல்லாம் போட்டு பேசியுள்ளார் மிஷ்கின்.

இயக்குநர் மிஷ்கின் எப்போதுமே வெளிப்படையாக பேசக் கூடியவர் என்பது தெரிந்த விஷயம் தான். பி.எஸ். வினோத்ராஜை ஆரம்பத்தில் பார்க்கும் போது கூழாங்கல் படத்தை பண்ணிட்டேன். அடுத்து கொட்டுக்காளி பண்றேன் என்றான். யாரு மியூசிக் டைரக்டர் எனக் கேட்டதும், யாருமே இல்லை என்றான். என்ன டேஷ் மாதிரி பேசுறான் என நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால், கொட்டுக்காளி படத்தை பார்த்த பின்னர், வினோத் என்னை செருப்பால அடிச்ச மாதிரி அந்த படம் இருந்தது.

இளையராஜா காலில் விழுந்து முத்தமிட்டு இருக்கிறேன். அவருக்குப் பிறகு வினோத்தின் காலில் விழுந்து முத்தமிட தயாராக உள்ளேன். இந்த படத்தை புரமோட் செய்ய நிர்வாணமாக டான்ஸ் ஆட சொன்னால் கூட நான் ரெடி தான். ஆனால், நான் நிர்வாணமாக ஆடினால் யார் பார்க்க ரெடி என பேசி அரங்கத்தையே சிரிப்பலையில் ஆழ்த்தி விட்டார் மிஷ்கின்.

சமீபத்தில் சிவகார்த்திகேயனுக்கு 3வது குழந்தை பிறந்தது. அவருக்கு இன்னொரு குழந்தையாக இந்த கொட்டுக்காளி இருக்கும். சிவகார்த்திகேயனால் இப்படியொரு படத்தில் நடிக்க முடியாது. அவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம், ரசிகர்களுக்காக படம் பண்ண வேண்டிய கட்டாயம் என இருக்கும் அந்த பையன், நம்ம தயாரிப்பில் இப்படியொரு படத்தை பண்ணனும் என நினைத்த நினைப்பு இருக்கே அதற்காகவே அவன் நல்லா இருப்பான் என்றார்.

விஜய்சேதுபதியை வைத்து டிரெய்ன் எனும் படத்தை இயக்கி வருகிறேன் 67 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. ஒரு நாள் கூட எங்களுக்குள் எந்தவொரு பிரச்சனையும் வரல. அந்தளவுக்கு சினிமாவை நேசித்து நடிக்கக் கூடிய நல்ல நடிகன்.

விஜய்சேதுபதியை தொடர்ந்து சூரியின் நடிப்பை பார்த்து மிரண்டு போயிட்டேன் இந்த படத்தில், கேரக்டர் ஆர்க் கதைகளிலும் சினிமாவிலும் தான் வரும். ஒரு மனிதன் சாதாரணமாக இருந்து சாதனை நாயகனாக மாறுவான். காமெடியனாக இருந்து அசுர நடிப்பை சூரி கொடுத்து வருவதை பார்க்கவே பிரம்மிப்பாக இருக்கு என பாராட்டினார்.

அன்னா பென் பற்றி பேசும் போது, இந்த படத்தில் அந்த பெண் ஒன்றரை வார்த்தை தான் பேசியிருக்கும். ஆனால், நிச்சயம் இந்த ஆண்டு தேசிய விருதை வெல்லக் கூடிய நடிப்பை அந்த பெண் கொடுத்திருக்கிறது என்றார் மிஷ்கின். சத்தமே இல்லாமல் ஒரு பெரிய அரசியல் கருத்துடன் உருவாகியுள்ள கொட்டுக்காளி படத்தை தியேட்டரில் சென்று ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *