நடிகை தமன்னா தொடர்ந்த வழக்கு – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தவு
ஒப்பந்த காலம் முடிந்த பின்னரும் தான் நடித்த விளம்பரங்கள் ஒளிபரப்பாவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து விளம்பர நிறுவனங்களுக்கு எதிராக பிரபல நடிகை தமன்னா தொடர்ந்த வழக்கில், உரிய பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தவு..
தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமான நடிகை தமன்னா, முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, இந்திப் படங்களிலும் தனது துள்ளலான நடிப்பின் மூலம் கொடி கட்டி பறந்தார்.
குறிப்பாக, பாகுபலி படத்தின் மூலம் பான் இந்தியா நட்சத்திரமாக ஜொலித்தார். மிகவும் பரபரப்பாக இயங்கும் நடிகை திடீரென நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
சினிமாவில் உச்ச நட்சத்திரமாக மின்னியதால் , பல்வேறு விளம்பர நிறுவனங்கள், அவரின் மூலம் தங்களது புரொடக்டுகளை விளம்பரப்படுத்தின. அதில், சோப்பு மற்றும் நகைகளை வாங்கி விற்கும் பிரபல நிறுவனங்களுக்கு விளம்பர மாடலாக தமன்னா நடித்திருந்தார்.
இதன் ஒப்பந்த காலம் நிறைவடைந்த பின்னரும் இவ்விரு நிறுவனங்களும், தான் நடித்துள்ள விளம்பரத்தை பயன்படுத்துவதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமன்னா வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த, தனி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, நகைகளை வாங்கி விற்கும் நிறுவனம் தமன்னாவின் விளம்பரத்தை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
ஆனால், தொடர்ந்து தனது விளம்பரத்தை பயன்படுத்துவதாக கூறி, கோல்டு நிறுவனத்திற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்திருந்தார் தமன்னா.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கோல்டு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமன்னாவின் விளம்பரத்தை தங்கள் நிறுவனம் நிறுத்தி விட்டதாக தெரிவித்தார். வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் தங்கள் பழைய விளம்பரங்களை தனி நபர் பயன்படுத்துவதாக கூறினார்.
அதற்கு, தாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது என வாதிட்டார். இது தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வருகின்ற செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். இதேபோன்று சோப்பு நிறுவனத்திற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு, விசாரணைக்கு வந்த போது எதிர் மனுதரார் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. இதனால், வழக்கை வருகின்ற செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்துள்ளனர்