தமிழ் சினிமாவில் தனித்துவமான தயாரிப்பாளர் டில்லி பாபு மரணம்

தமிழ் சினிமாவில் தனித்துவமான தயாரிப்பாளர் டில்லி பாபு மரணம்
  • PublishedSeptember 9, 2024

தமிழ் சினிமாவில் தனித்துவமான தயாரிப்பாளராக வலம் வந்த டில்லி பாபு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவருக்கு வயது 50. அவரின் திடீர் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

அவரின் இறுதிச்சடங்கு இன்று மாலை 4.30 மணிக்கு சென்னை பெருங்குளத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது. டில்லி பாபு மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக வலம் வந்தவர் டில்லி பாபு. ஆக்சஸ் பிலிம் பேக்டரி என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் இவர் கடந்த 2015-ம் ஆண்டு பாபி சிம்ஹா நடிப்பில் வெளிவந்த உறுமீன் படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார்.

2018-ம் ஆண்டு விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்த ராட்சசன் திரைப்படத்தை தயாரித்ததும் டில்லி பாபு தான்.

ராட்சசன் படத்தின் கதை 17 நடிகர்கள் ரிஜெக்ட் பண்ணிய பின் விஷ்ணு விஷாலை வைத்து தயாரித்து அதில் வெற்றியும் கண்டார் டில்லி பாபு. அப்படம் தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட்டானதும் அதை தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்தனர்.

ராட்சசன் படத்தின் வெற்றியை தொடர்ந்து டில்லி பாபு தயாரிப்பில் வெளிவந்த மற்றுமொரு மாஸ்டர் பீஸ் திரைப்படம் மரகத நாணயம்.

மரகத நாணயம் படமும் தமிழில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் டில்லி பாபு தயாரிப்பில் வெளியாகி வெற்றிகண்ட படம் தான் ஓ மை கடவுளே.

ரொமாண்டிக் பேண்டஸி கதையம்சம் கொண்ட இப்படத்தை அஸ்வந்த் மாரிமுத்து இயக்கி இருந்தார். விஜய் சேதுபதி, அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு காதலர் தின விருந்தாக திரைக்கு வந்த இப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை ருசித்தது.

இதையடுத்து ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்து கடந்த 2021-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட்டான பேச்சிலர் படத்தை டில்லி பாபு இயக்கினார். இப்படத்தை புதுமுக இயக்குனர் செல்வகுமார் இயக்கி இருந்தார்.

இப்படமும் இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று மாஸ் ஹிட் அடித்தது. இப்படி அவர் தயாரித்த படங்கள் பெரும்பாலானவை இளம் இயக்குனர்கள் இயக்கியது. இப்படி இளம் திறமையாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பளித்து வெற்றிகண்டவர் டில்லி பாபு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *