சாகசம் பார்க்கச்சென்று பலியான மக்கள்… கவலையில் த.வெ.க தலைவர்

சாகசம் பார்க்கச்சென்று பலியான மக்கள்… கவலையில் த.வெ.க தலைவர்
  • PublishedOctober 7, 2024

சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகசம் பார்க்க போய் பலியானோர் குடும்பத்திற்கு நடிகரும் தவெக கட்சி தலைவருமான விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் முதன்முறையாக விமான சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் நடைபெற்றது. அதைக் காண லட்சக்கணக்கான மக்கள் சென்னை மெரினா கடற்கரையில் குவிந்ததால் அப்பகுதி ஸ்தம்பித்து போனது.

சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஒரே இடத்தில் கூடியதால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசாரும் திணறிப்போயினர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலியாகி உள்ளனர்.

இது தவிர நூற்றுக்கணக்கானோர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சரியான திட்டமிடல் இல்லாததால் இந்த மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் போனதாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்த விமான சாகச நிகழ்ச்சி பார்க்க போய் பலியான 5 பேரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,

‘சென்னையில் இந்திய விமானப் படை சார்பில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு, வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், தங்கள் வேதனையை வெளிப்படுத்திய செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன.

இப்படி மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்’ என அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *