“என் அரசியல் பயணத்தை இங்கிருந்து தொடங்குகின்றேன்” பரந்தூரில் விஜய் அதிரடி

“என் அரசியல் பயணத்தை இங்கிருந்து தொடங்குகின்றேன்” பரந்தூரில் விஜய் அதிரடி
  • PublishedJanuary 20, 2025

“என்னோட கள அரசியல் பயணம் உங்களின் ஆசிர்வாதத்தோடு இங்கிருந்து தான் தொடங்குகிறது.” என்று பரந்தூர் விவசாயிகள் முன்னிலையில் தவெக தலைவர் விஜய் பேசினார்.

சென்னையின் 2 ஆவது விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் அமைகிறது. இதற்காக பரந்தூர், தண்டலம், மகாதேவி, நாகப்பட்டு, நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்து 100 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முற்றிலும் கையகப்படுத்தப்பட உள்ளதால், அந்த கிராமத்தை மையமாக வைத்து 900 நாட்களுக்கு மேலாக மக்கள் போராடி வருகின்றனர். இவர்களது போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தவெக தலைவரும், நடிகருமான விஜய் பரந்தூர் விமான நிலைய போராட்டக் குழுவினரை இன்று சந்தித்து வருகிறார். பரந்தூரில் உள்ள வீனஸ் திருமண மண்டபத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது.

ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தவெக கொடி கட்டிய பிரச்சார வாகனத்தில் பரந்தூரில் உள்ள வீனஸ் திருமண மண்டபத்துக்கு வருகை தந்த விஜய், விவசாயிகள் முன்னிலையில் பேசினார். அதில், “கிட்டத்தட்ட 910 நாட்களுக்கு மேல் உங்கள் மண்ணுக்காக போராடுகிறீர்கள். உங்கள் போராட்டத்தை பற்றி ஒரு சிறுவன் பேசியது எனது மனதை ஏதோ பண்ணியது. உடனே உங்களை எல்லாம் பார்க்கணும் தோணுச்சு. உங்க கூட பேசிய ஆகணும்னு தோணுச்சு. உங்க எல்லார் கூடயும் நிற்பேன், தொடர்ந்து நிற்பேன் என உங்ககிட்ட சொல்லணும் தோணுச்சு.

ஒவ்வொரு வீட்டுக்கும் அவர்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தான். அதேபோல் நமது நாட்டுக்கு முக்கியமானவர்கள் விவசாயிகள். அந்த விவசாயிகளின் காலடி மண்ணை தொட்டு கும்பிட்டு எனது பயணத்தை தொடங்க வேண்டும் என்று முடிவோடு தான் இருந்தேன். அதற்கு சரியான இடம் இதுதான் என எனக்கு தோன்றியது.

உங்கள் வீட்டில் உள்ள ஒரு மகனாக என்னோட கள அரசியல் பயணம், உங்களின் ஆசிர்வாதத்தோடு இங்கிருந்து தான் தொடங்குகிறது. தவெக மாநாட்டில் கொள்கையை அறிவித்தோம். இதனை இங்கே சொல்ல காரணம் ஓட்டு அரசியலுக்காக அல்ல. இந்த பிரச்சினையில் நான் உங்களோடு உறுதியாக நிற்பேன்.

ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். வளர்ச்சிக்கு எதிரானவன் நான் அல்ல. ஏர்போர்ட் வர வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. இந்த இடத்தில் வர வேண்டாம் என்று தான் சொல்கிறேன். இதனை நான் சொல்லவில்லை என்றால் என்னை வளர்ச்சிக்கு எதிரானவன் போல பேசுவார்கள்.

சென்னை வெள்ளத்துக்கு காரணம், சுற்றுவட்டார பகுதியில் உள்ள நீர் நிலைகளை அழித்தது தான் என ஆய்வுகள் சொல்கின்றன. இப்படி ஒரு சூழல் இருக்கும்போது 90 சதவீத நீர் நிலைகளை அழித்து பரந்தூர் விமான நிலையத்தை கொண்டுவர வேண்டும் என்கிற முடிவை எந்த அரசு கொண்டுவந்தாலும், அது மக்கள் விரோத அரசாக தான் இருக்க முடியும்.

டங்க்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஆனால், அதே நிலைப்பாட்டை தானே பரந்தூர் பிரச்சினையிலும் எடுத்திருக்க வேண்டும். அரிட்டாபட்டி மக்கள் எப்படியோ, அப்படி தானே பரந்தூர் மக்களும். அப்படி தானே அரசாங்கம் யோசிக்க வேண்டும். ஆனால் அரசு அப்படி செய்யவில்லை. ஏன் செய்யவில்லை.

ஏனென்றால், விமான நிலையத்தையும் தாண்டி இந்த திட்டத்தில் அவர்களுக்கு ஏதோ ஒரு லாபம் இருக்கிறது. அது மக்கள் தெளிவாக புரிந்து வைத்துள்ளார்கள்.

ஆட்சியாளர்களுக்கு ஒரு சில கேள்விகள்… நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது 8 வழிச்சாலையை எதிர்த்தீர்கள். அதே நிலைப்பாட்டை தானே இங்கே எடுத்திருக்க வேண்டும். எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளுங்கட்சியாக இருக்கும் போது விவசாயிகளுக்கு எதிர்ப்பா.. எனக்கு புரியவில்லையே.

இனிமேலும் உங்கள் நாடகத்தை பார்த்து மக்கள் சும்மா இருக்கமாட்டார்கள். நீங்கள் உங்களின் வசதிக்காக அவர்களோடு நிற்பதும், நிற்காமல் இருப்பதும் நாடகம் ஆடுவதும், நாடகம் ஆடாமல் இருப்பதையும் நிறுத்த வேண்டும். நம்புகிற மாதிரி நாடகம் ஆடுவதில் தான் நீங்கள் கில்லாடி.

விமான நிலையத்துக்காக ஆய்வு செய்த இடத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுக்கு வலியுறுத்துகிறேன். விவசாய நிலங்கள் இல்லாத பாதிப்புகள் குறைவாக இருக்கிற இடமாக பார்த்து விமான நிலையத்தை கொண்டுவாருங்கள்.

வளர்ச்சி தான் மக்களின் முன்னேற்றம். வளர்ச்சியின் பெயரால் நடக்கும் அழிவு மக்களை மிக அதிகமாக பாதிக்கும். மக்கள் உங்கள் தெய்வங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழக்காதீர்கள். உங்களுக்காகவும், உங்கள் ஊருக்காகவும் இனி உங்க வீட்டு பிள்ளையான நானும், தவெகவும் சட்டத்துக்கு உட்பட்டு எல்லா வழிகளிலும் உங்களோடு உறுதியாக நிற்பேன்.

ஏகனாபுரம் அம்பேத்கர் திடலில் உங்களை சந்திப்பது தான் எனது திட்டம். ஆனால், என்னை அனுமதிக்கவில்லை. நான் ஏன் ஊருக்குள் வர தடை விதிக்கப்பட்டது என்று தெரியவில்லை. இதேபோல் சில நாட்கள் முன், துண்டு சீட்டு கொடுத்ததற்கு தடை விதித்தார்கள். அதுவும் ஏன் எனத் தெரியவில்லை. நம்பிக்கையுடன் இருங்கள். வெற்றி நிச்சயம்.” என்று பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *