விஜய் நடிக்கும் இறுதி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது… பெயர் என்ன தெரியுமா?
தமிழ் திரையுலகில் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக வலம் வருபவர் விஜய். இவர் நடித்த படங்கள் வசூலில் தொடர்ந்து சாதனை நிகழ்த்தி வருகின்றன. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் கோட் திரைப்படம் ரிலீஸ் ஆனது.
அந்த ஆண்டின் அதிக வசூல் ஈட்டிய படமும் அதுதான். கோட் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் தற்போது தளபதி 69 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இதுதான் நடிகர் விஜய்யின் கடைசி படமாகும். இப்படத்துடன் சினிமாவை விட்டு விலகுகிறார் விஜய்.
தளபதி 69 திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் இதற்கு முன்னர் பீஸ்ட் படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். அதுமட்டுமின்றி இப்படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிக்கிறார்.
இதுதவிர மமிதா பைஜு, டிஜே அருணாச்சலம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரித்து வருகிறது.
இப்படத்தில் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன் பணியாற்றி வருகிறார். மேலும் சண்டைப்பயிற்சியாளராக அனல் அரசு, படத்தொகுப்பாளராக பிரதீப் இ ராகவ், கலை இயக்குனராக செல்வக்குமார் என பலமாக தொழில்நுட்ப குழுவுடன் உருவாகி வரும் தளபதி 69 திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு வருகின்றனர். இப்படத்துடன் சினிமாவை விட்டு விலகும் விஜய், அரசியலில் களமிறங்க உள்ளார்.
இந்நிலையில், குடியரசு தினமான இன்று தளபதி 69 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ஜன நாயகன் என பெயரிடப்பட்டு உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் தன் பின்னால் மக்கள் படை திரண்டிருக்க, நடிகர் விஜய் அவர்களுடன் உற்சாகம் பொங்க செல்பி எடுக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் ராணுவ வீரராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் படத்தின் ரிலீஸ் பற்றி எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.