படப்பிடிப்பின் போது போதையில் தள்ளாடிய நடிகர்கள்..அதிரடி முடிவு எடுத்த திரையுலகம்!
மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி, ஷேன் நிகாம் ஆகியோருக்கு மலையாள திரைப்பட உலகம் அதிரடியாக தடை விதித்துள்ளது.
ஆர்ஜேவாக இருந்த ஸ்ரீநாத் பாசி, பிராணாயாமம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். தனது திறமையால் படவாய்ப்பை பெற்ற ஸ்ரீநாத் பாசி, அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இந்நிலையில், மலையாள திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் மற்றும் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் (அம்மா), தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர்கள் ஷேன் நிகம் மற்றும் ஸ்ரீநாத் பாசி ஆகியோருக்கு ஒத்துழைப்பு தர முடியாது என்று கூறிவிட்டதால், அவர்கள் இருவருக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தயாரிப்பாளர் ரஞ்சித் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில, குடிக்கு அடிமையான இந்த இரு நடிகர்களையும் சங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. ஷேன் நிகாம் மற்றும் ஸ்ரீநாத் பாசி இருவரும் அடிக்கடி படப்பிடிப்பு தளத்தில் சுயநினைவை இழக்கும் அளவுக்கு குடித்துவிட்டு வருகின்றனர். இவர்கள் குடித்துவிட்டு படப்பிடிப்பில் கலந்து கொண்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவர்களின் செயலால் சக நடிகர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. படப்பிடிப்புதளத்திற்கு குடித்துவிட்டு வருவதை ஒருபோதும் சங்கம் அனுமதிக்காது. படப்பிடிப்பு தளத்தில் நடிகர், நடிகைகளை பாதுகாப்பாக பார்த்துக்கொள்வது சங்கத்தின் பணி, எனவே இதில் எந்தவிதமான சமசரத்திற்கும் இடம் இல்லை என்று கூறி இருவருக்கும் நடிக்க தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடிகத் ஷேன் நிகம், பெர்முடா, குபானி, கல்ப், பைங்கிலி, பராக்கிரமம் மற்றும் ஆயிரத்தோன்னம் ரவு ஆகிய படங்களில் ஒப்பந்தமாகி உள்ள நிலையில் இந்த படங்களின் நிலை என்ன ஆகுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. நீலகாஷம் பச்சைக்கடல் சுவாச பூமி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் ஷேன் நிகம். இதனைத் தொடர்ந்து கிஸ்மத், பரவா, கும்பலாங்கி நைட்ஸ் மற்றும் இஷ்க் போன்ற படங்களில் நடித்தார். வளர்ந்து வரும் இளம் நடிகர்களான இவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.