“பேபி ஆழியா என் படத்தில் ஹீரோயின்…” சரத்குமாருக்கு வந்த ஆசை
‘தி ஸ்மைல் மேன்’ பட நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சரத்குமார், எனக்கு வயசே ஆகாது என்றும் குழந்தை நட்சத்திரம் ஆழியா எதிர்காலத்தில் தன் படத்தில் ஹீரோயினாகக்கூட நடிக்கலாம் என்றும் பேசியுள்ளார்.
சுப்ரீம் ஸ்டார் என்று பெயர் வாங்கிய நடிகர் சரத்குமார் நடித்த 150வது திரைப்படம் ‘தி ஸ்மைல் மேன்’. சியாம் பிரவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் டிசம்பர் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
தி ஸ்மைல் மேன் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி சனிக்கிழமை சென்னையில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். அப்போது படத்தில் நடித்திருக்கும் குழந்தை நட்சத்திரம் ஆழியாவும் பேசினார். ஆழியா பேசும்போது, சரத்குமாரை அங்கிள் என்று குறிப்பிட்டார்.
பின்னர் அதற்குப் பதில் சொல்லிப் பேசிய சரத், “நான் எப்போதும் யங் (இளமை) தான். எனக்கு எப்போதும் வயசே ஆகாது. ஆழியா வளர்ந்து என் படத்தில் ஹீரோயினியாக நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை” எனக் கூறியுள்ளார்.
அரசியல்வாதிகள் நடிகர்களைக் கூத்தாடிகள் என்று சொல்வது பற்றிய கேள்விக்கு பதில் சொன்ன அவர்,
“அரசியலில் நடிகர்களை தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்கிறார்கள். நான் யாரைச் சொல்கிறேன் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும்” என்றார்.
‘சூர்ய வம்சம்’ படத்தின் 2ஆம் பாகம் அப்டேட் குறித்து பேசிய நடிகர் சரத்குமார், “தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி விரைவில் அறிவிப்பார்” என்று கூறினார்.
நடிகர் சரத் குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்ததில் இருந்து சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். எனவே சூர்ய வம்சம் 2 பற்றிய அறிவிப்பு சீக்கிரம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.