சல்மானின் குறையைப் போக்குவார்களா ரசிகர்கள்?

சல்மானின் குறையைப் போக்குவார்களா ரசிகர்கள்?
  • PublishedMarch 28, 2025

பான் இந்தியா என தென்னிந்தியப் படங்களும் இந்திய அளவில் வரவேற்பைப் பெற ஆரம்பித்துவிட்டன. அப்படங்களில் சில 1000 கோடிக்கும் அதிகமாகவும் வசூலித்து ஹிந்தித் திரையுலகத்தையும் மாற்றிவிட்டது.

தென்னிந்தியப் படங்களின் தாக்கத்தால் ஹிந்தி சினிமா ரசிகர்களும் மாறுபட்ட படங்களைப் பார்க்க ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால், ஹிந்திப் படங்களுக்கான வரவேற்பும் குறைந்தது.

அதேசமயம், ஹிந்தியில் எடுக்கப்படும் பான் இந்தியா படங்கள் தென்னிந்திய அளவில் வரவேற்பைப் பெறுவதில்லை. அது முன்னணி ஹிந்தி நடிகரான சல்மான்கானை வருத்தப்பட வைத்துள்ளது. சமீபத்திய பேட்டி ஒன்றில் அது குறித்து தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

“இங்கு தென்னிந்தியப் படங்களை எப்போதுமே வரவேற்கிறோம். அதேசமயம் அங்கு இப்படி நடப்பதில்லை. நாங்கள் அவர்களது படங்களைப் போய் பார்க்கிறோம். ஆனா, அதுபோல அவர்கள் எங்களது படங்களை வந்து பார்ப்பதில்லை.

தென்னிந்தியாவில் கடை கோடியில் சென்றால் கூட ரசிகர்கள் எங்களைத் தெரிந்து கொண்டு வாழ்த்துகிறார்கள். ஆனால், அவர்களை தியேட்டர்கள் பக்கம் வரவழைப்பது சவாலாக உள்ளது. ரஜினிகாந்த், ராம் சரண், சூர்யா ஆகியோரது படங்களை பாலிவுட் ரசிகர்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். ஆனால், அதே போன்ற அன்பை அவர்கள் ஹிந்திப் படங்கள் மீது காட்டுவதில்லை.

இத்தனைக்கும் நான் தென்னிந்திய இயக்குனர்கள், நடிகர்கள், டெக்னீஷியன்கள் ஆகியோருடன் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறேன். எனது படங்கள் தென்னிந்தியாவில் வெளியாகும்போது அவை வெற்றி பெறுவதில்லை. தென்னிந்திய நடிகர்களை பெரும் அளவிலான ரசிகர்கள் தொடர்வதே இதற்குக் காரணம் என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் இயக்குனரான ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள ‘சிக்கந்தர்’ ஹிந்திப் படம் நாளை மறுதினம் வெளியாக உள்ளது. அப்படத்தில் தமிழ் நடிகரான சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். பின்னணி இசை அமைத்துள்ளவர் தமிழ் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளவர் தமிழ் ஒளிப்பதிவாளர் திரு. படத்தொகுப்பு செய்துள்ளார் தமிழ் எடிட்டர் விவேக் ஹர்ஷன்.

இத்தனை தமிழ் கலைஞர்கள் இணைந்துள்ள ‘சிக்கந்தர்’ படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்து, சல்மானின் குறையைப் போக்குவார்களா ?.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *