13 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷா எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

13 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷா எடுத்துள்ள அதிரடி தீர்மானம்
  • PublishedDecember 31, 2023

தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி உள்ள நடிகை த்ரிஷா, பாலிவுட்டில் ரீ என்ட்ரியாக உள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மாறி மாறி நடித்த த்ரிஷாவுக்கு தெலுங்கில் தனி மார்க்கெட் உண்டு. மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கெல்லாம் ஜோடி போட்டு நடித்துள்ள இவர், சிம்பு, தனுஷ், விக்ரம் சூர்யா, விஷால், ஜெயம் ரவி, ரஜினி, கமல், அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்புவுடன் இவர் நடித்த விண்ணை தாண்டி வருவாயா திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் சிம்பு மற்றும் த்ரிஷாவின் ரொமான்ஸ் சும்மா அல்டிமேட்டாக இருக்கும். த்ரிஷாவின் சினிமா கேரியரில் இத்திரைப்படம் மறக்க முடியாத திரைப்படமாகும்.

இதன் பிறகு ஒரு சில ஹிட் படங்களில் நடித்து வந்த த்ரிஷா திடீரென படங்களில் தென்படாமல் போனார். இதையடுத்து, மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்திருந்தார். இந்த படம் பெரும் வெற்றி பெற்று வசூலை அள்ளியது. குறிப்பாக த்ரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரத்திற்கு வரவேற்பு கிடைத்தது.

இந்த படத்திற்கு பிறகு தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி இருக்கும் த்ரிஷா, விஜய்யுடன் மீண்டும் ஜோடி போட்டு லியோ படத்தில் நடித்தார். இந்த படமும் வசூலை அள்ளியது. இந்த படத்தை தொடர்ந்து அஜித்திற்கு ஜோடியாக விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

இப்படி அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் நடிகை த்ரிஷாவிற்கு பாலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுக்க வாய்ப்பு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, நடிகை த்ரிஷா, சல்மான் கான் அடுத்து நடிக்க இருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக கமிட்டாகி உள்ளார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்திற்கு ‘தி புல்’ என்று தலைப்பு வைக்கப்படவுள்ளது.

1988ம் ஆண்டு, ‘ஆபரேஷன் காக்டஸ்’ என்ற இராணுவ நடவடிக்கை இருந்தது, மாலத்தீவு ஜனாதிபதியைப் பாதுகாக்க இந்திய இராணுவம் இந்த நடவடிக்கையைத் திட்டமிட்டது. இந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை எடுக்க படக்குழுத் திட்டமிட்டுள்ளது.

நடிகை த்ரிஷா 2010ல் அக்‌ஷய் குமார் நடித்த கட்டமீட்டா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான இவருக்கு அதன் பிறகு இந்தியில் வாய்ப்புகள் வரவில்லை. தற்போது 13 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தனக்கு பிடித்த நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இப்படத்தில் சல்மான் கான் ராணுவ அதிகாரியாக நடிக்கவுள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *