நாடி நரம்புக்குள் புகுந்து மயக்கும் அதிசயம் இது… செல்வராகவன் டுவிட்
மாமன்னன் படத்தில் வரும் நெஞ்சமே நெஞ்சமே பாடலைக் கேட்டு மயங்கி இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மானை வெகுவாக புகழ்ந்துள்ளார்.
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் திரைப்படத்திற்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இதில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு,பகத் பாசில், கீர்த்தி சுரேஷ்,ரவீனா,லால், விஜயகுமார் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
மாமன்னன் திரைப்படம் வெளியாகும் முன்பே இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகவே இருந்தது. அதற்கு காரணம் மாரி செல்வராஜின் முந்தைய படங்கள் பெற்ற வெற்றியும், இப்படம் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்பதால், இத்திரைப்படம் குறித்து வரும் ஒவ்வொரு அப்டேட்டும் பெரும் பேசு பொருளாகவே இருந்தது.
இத்திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு இதுவரை நாம் பார்க்காத வேறுவிதமான நடிப்பை கொடுத்து ரசிகர்களிடம் கைத்தட்டலை பெற்றுள்ளார். நடிப்பால் தன்னால் சிரிக்க வைக்கவும் முடியும், அதே நடிப்பால் தன்னால் அழவைக்கவும் முடியும் என்று வடிவேலு நிரூபித்து விட்டார். அவரின் நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மாமன்னன் படத்தில் நடித்த அனைவரின் நடிப்பும் பாராட்டும் வகையில் இருந்தாலும், படத்தின் ஹீரோவோ வடிவேலு மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் மியூசிக் தான். அந்த படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் தனக்கு என்று இருந்த ஸ்டைலையே மாற்றி உள்ளார். முதல் முதலாக ஒப்பாரி பாடலை படம் முழுக்க வைத்து பார்வையாளர்களின் மனதை சோகத்தில் ஆழ்த்தி விட்டார். அந்த வகையில் விஜய் ஏசுதாஸ் குரலில் வெளியான நெஞ்சமே நெஞ்சமே பாடலும், வடிவேலு பாடிய ராசா கண்ணு பாடலும் ஹிட் பாடலாக அமைந்துள்ளது.
அந்த பாடலை கேட்ட இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில்,
‘தமிழில் இப்படி ஒரு பாடலை கேட்டு எவ்வளவு நாளாயிற்று என்றும், தலைவா… நாடி நரம்புக்குள் புகுந்து மயக்கும் அதிசயம் இது… இந்த பாடலின் வரிகள் மிக மிக அருமையாக இருக்கிறது என்று, பாடல் ஆசிரியர் யுகபாரதியை செல்வராகவன் வெகுவாக பாராட்டியுள்ளார்.