மீண்டும் “எஞ்சாயி எஞ்சாமி” பாடல் சர்ச்சை – சந்தோஷ் நாராயணன் ஆதங்கம்

மீண்டும் “எஞ்சாயி எஞ்சாமி” பாடல் சர்ச்சை – சந்தோஷ் நாராயணன் ஆதங்கம்
  • PublishedMarch 6, 2024

ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்ற எஞ்சாயி எஞ்சாமி பாடல் மூலம், தனக்கு ஒரு பைசா கூட வருமானம் கிடைக்கவில்லை என்று இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையில், “தெருக்குரல்” அறிவு எழுதிய இப்பாடல் சுயாதீன ஆல்பமாக வெளியானது. இதனை சந்தோஷ் நாராயணனின் மகள் தீ பாடி இருந்தார். சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில், ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கிய மாஜா தளத்தின் யூ-டியூப் சேனில் இப்பாடலின் உரிமையை பெற்றிருந்தது. இதற்கு யூ-டியூப் தளத்திலும் பார்வையாளர்களுக்கு பஞ்சமில்லை.

இப்பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஒலித்த நிலையில், தெருக்குரல் அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் இடையே சர்ச்சை வெடித்தது. பிரபல இதழ் ஒன்றில், ‘எஞ்ஜாய் எஞ்சாமி’ பாடல் குறித்து வெளியான செய்தியில் அறிவு பெயர் இடம்பெறவில்லை. இதன் நீட்சியாக, கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில், எஞ்சாயி எஞ்சாமி பாடலை தீ மற்றும் மாரியம்மாள் பாடியிருந்தார்கள்.

தொடர்ந்து, தெருக்குரல் அறிவு புறக்கணிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தன. ஆனால், இப்பாடல் வெளியாகி 3 ஆண்டுகள் கடந்த நிலையில், தனக்கு ஒரு பைசா கூட வருமானம் கிடைக்கவில்லை என்று சந்தோஷ் நாராயணன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட நிறுவனத்தை தொடர்பு கொண்டும் எந்த பலனும் இல்லை என்று ஆதங்கப்பட்ட சந்தோஷ் நாராயணன், சொந்த ஸ்டூடியோவைத் தொடங்க முடிவு செய்துள்ளார்.

சுயாதீன இசை கலைஞர்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் கூடிய தனி தளம் தேவை என்று சந்தோஷ் நாராயணன் குறிப்பிட்டுள்ளார். இனி, சுயாதீன கலைஞர்கள் கவலைப்படத் தேவையில்லை, உங்களுக்கு கிடைக்க வேண்டியது வந்து தீரும் என்று கூறியுள்ளார்.

ரசிகர்களை என்ஜாய் மோடுக்கு இட்டுச்சென்ற என்ஜாயி, எஞ்சாமி பாடல், கலைஞர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானும் பொய் வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டதாக இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் விளக்கம் அளித்துள்ளார். எஞ்சாய் எஞ்சாமி பாடல் குறித்து அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், ஏ.ஆர்.ரஹ்மானை மறைமுகமாக சாடுவதை போன்ற தோற்றம் உருவானது.

இதற்கு விளக்கம் அளித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள சந்தோஷ் நாராயணன், எந்த எதிர்பார்ப்பும் இன்றி, ஏ.ஆர்.ரஹ்மான் தனக்கு பக்கபலமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவரும் போலி வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டதாக சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

தான் மட்டுமின்றி, அறிவு, தீ, உட்பட எந்த கலைஞர்களுக்கும், எஞ்சாய் எஞ்சாமி பாடல் மூலம் வருமானம் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். அதற்கு பதிலாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல்கள் மட்டுமே வந்ததாக குறிப்பிட்ட சந்தோஷ் நாராயணன்,

இப்பிரச்னையில் இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் அறிவுக்கு முழு ஆதரவு அளிப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *