ஒரே நாளில் அஜித், விஜய் பட தயாரிப்பாளர்களுக்கு செக்….

ஒரே நாளில் அஜித், விஜய் பட தயாரிப்பாளர்களுக்கு செக்….
  • PublishedJanuary 21, 2025

விஜய் மற்றும் அஜித் பட தயாரிப்பாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் இறங்கியதால், சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் விஜயின் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ படத்தை தயாரித்த தில் ராஜு தான், தற்போது வருமான வரித்துறையினர் சோதனைக்கு உள்ளாகியுள்ளார். இவரின் தயாரிப்பில் பொங்கலுக்கு இரண்டு படங்கள் வெளியாகி, வசூலை குவித்து வரும் நிலையில், சிக்கலை சந்தித்துள்ளார்.

சினிமா உலகில் தில் ராஜு என அழைக்கப்படும், வெங்கட ரமண ரெட்டி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் முன்னணி திரைப்பட தயாரிப்பாளராக வெற்றிக் கொடி நாட்டி வருகிறார்.

அண்மையில், ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்த ‘கேம் சேஞ்சர்’ மற்றும் வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘சங்கராந்திக்கு ஒஸ்தானு’ என்ற படங்களையும் தயாரித்துள்ளார்.

பொங்கலுக்கு வெளியான இந்த படங்களில் அதிக பொருட்செலவில் உருவான ‘கேம் சேஞ்சர்’ பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என கூறப்படுகிறது. அதேவேளையில், சிறிய பட்ஜெட்டில் உருவான ‘சங்கராந்திக்கு ஒஸ்தானு’ படம், 100 கோடி வசூலை கடந்து சக்கை போடு போட்டு வருகிறார்.

சினிமா தயாரிப்பு மூலம் கோடிகளில் வருவாய் ஈட்டிய தில் ராஜு, முறையாக வருமான வரி செலுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது.

அத்துடன், வருவாயை குறைத்து காட்டியதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, ஹைதராபாத்தில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகம் உட்பட 8 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் இறங்கினர்.

55 அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக சென்று, 8 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனையை தொடங்கியுள்ளனர். மேலும், தில் ராஜுவின் சகோதரர் சிரிஷ் மற்றும் மகள் ஹன்சிதா ரெட்டி ஆகியோரின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் இறங்கினர்.

இதேவேளை, ‘புஷ்பா-2’ திரைப்பட தயாரிப்பாளர் மைத்ரி நவீனுக்கு தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் அண்மையில் வெளியான ‘புஷ்பா-2’ படம், உலகம் முழுவதும் 1,500 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், லாபத்தை மூடி மறைத்ததாக புகார் எழுந்தது. இதன் எதிரொலியாகவே, மைத்ரி நவீனுக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனையில், வருமான வரித்துறையினர் இறங்கியுள்ளனர். நடிகர் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தை, மைத்ரி நவீன் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னணி தயாரிப்பாளர்கள் இருவரின் வீடுகளில் சோதனையில் இறங்கிய போதும், அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து எதுவும், அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. தில் ராஜு மற்றும் மைத்ரி நவீன் வீடுகளில் அடுத்தடுத்து வருமான வரித்துறையின் சோதனையால், தெலுங்கு மட்டும் இன்றி ஒட்டுமொத்த திரைத்துறையினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *