அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… தெலுங்கு சினிமா உலகில் பரபரப்பு
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்திய நபர்கள் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் ஆட்கள்தான் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.
இதனால் முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
பிரபல டோலிவுடன் நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கானா மாநிலம் ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், அவரது வீட்டின் மீது உஸ்மானிய பல்கலைக்கழக கமிட்டி உறுப்பினர்கள் சிலர் ஞாயிறு காலை கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வீட்டின் மதிற்சுவரைத் தாண்டிக் குதித்து உள்ளே சென்று கற்களை வீசித் தாக்கினர். கற்களை வீசித் தாக்கியதுடன் வீட்டு வளாகத்தில் இருந்த பூந்தொட்டிகளையும் உடைத்து தகறாறு செய்தனர். இந்தச் சம்பவம் தெலுங்கு சினிமா உலகில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
‘புஷ்பா 2’ படத்தின் சிறப்புக் காட்சி திரையிடலின்போது கூட்ட நெரிசலில் உயிரிழந்த ரேவதி என்ற பெண்ணின் குடும்பத்தினருக்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் ரேவதியின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்ட 8 பேரையும் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் தனது எக்ஸ் பக்கத்தில் இந்தத் தாக்குதல் குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,
“உங்கள் உணர்ச்சிகளை பொறுப்புடன் வெளிப்படுத்துங்கள், தயவுசெய்து அருவருப்பான செயல்களில் ஈடுபடாதீர்கள். சமூக ஊடகங்களில் போலி ஐடிக்கள் மூலம் எனது ரசிகர் என்று சொல்லிக்கொண்டு தவறாக பதிவுகளை வெளியிட வேண்டாம். அவ்வாறு பதிவிட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்” எனவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், முதல்வர் ரேவந்த் ரெட்டியின் ஆட்கள்தான் அல்லு அர்ஜுன் வீட்டைத் தாக்கியுள்ளனர் என்ற தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. கல்வீச்சில் ஈடுபட்ட நபர்கள் முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் நெருக்கமாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன