இந்தியன் 2வால் கேம் சேஞ்சருக்கு வந்த சிக்கல்… பொங்கலுக்கு ரிலீஸாகுமா?
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் கேம் சேஞ்சர். இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். இப்படத்தில் ராம் சரண் நாயகனாகவும், பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நாயகியாகவும் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜனவரி 10ந் தேதி பொங்கல் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கேம் சேஞ்சர் படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே எஞ்சி உள்ள நிலையில், அப்படத்தின் ரிலீசுக்கு தமிழ்நாட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கேம் சேஞ்சர் படத்தின் வெளியீட்டுக்கு லைகா நிறுவனம் தான் முட்டுக்கட்டை போடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏனெனில் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த இந்தியன் 2 திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது. அது மட்டுமின்றி அப்படத்தை தயாரித்த லைகா நிறுவனத்துக்கும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.
இந்தியன் 2 ஷூட்டிங்கின் போதே அதன் 3ம் பாகத்தையும் எடுத்து முடித்துவிட்டார் ஷங்கர். அதில் இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட வேண்டி இருந்தது. ஆனால் இந்தியன் 2 ரிசல்டை தொடர்ந்து சில காட்சிகளை ரீ ஷூட் பண்ணும் முடிவுக்கு ஷங்கர் வந்துள்ளதால் அதற்கு 80 கோடி வரை செலவாகும் என கேட்டிருக்கிறார்.
இதில் அவரின் 30 கோடி சம்பளமும் அடங்குமாம். ஆனால் லைகா தரப்பு, ஏற்கனவே இந்தியன் 2 படமே படுதோல்வி அடைந்ததால் சம்பளத்தை கழித்துவிட்டு தயாரிப்பு செலவை மட்டும் தருவதாக கூறி இருக்கிறது. அதோடு தற்போது எடுத்தது வரை இந்தியன் 3 படத்தை போட்டுக்காட்டுமாரு கேட்டிருக்கிறது. அதற்கு ஷங்கர் மறுத்துவிட்டாராம். இதனால் இருதரப்புக்கும் இடையே பஞ்சாயத்து நீடிக்கிறது.
இந்த நிலையில், லைகா நிறுவனம் திரைப்பட கவுன்சிலில் கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்ய தடை கோரி புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியன் 3 படத்தை முடித்துக் கொடுக்க ஷங்கர் ஒப்புதல் அளிக்காவிட்டால் அப்படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்யக் கூடாது என கூறியுள்ளதாம்.
இதனால் டென்ஷன் ஆன கேம் சேஞ்சர் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, அவர்கள் இருவருக்கு இடையே உள்ள தனிப்பட்ட பிரச்சனையால் நான் தயாரித்த படத்தை தடைவிதிக்க சொல்வது நியாயமில்லை. இது மிகவும் தவறான செயல் என எச்சரித்துள்ளாராம். இதனால் கேம் சேஞ்சர் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா ஆகாதா என்பதில் இழுபறி நீடித்து வருகிறது.