“கேம் சேஞ்சர்” படத்துக்காக வந்த ரியல் கேம் சேஞ்சர் கமல்..
ஷங்கர் இயக்கியுள்ள கேம் சேஞ்சர் (Game Changer) படத்தின் ரிலீஸில் ஏற்பட்டுள்ள பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக லைகா நிறுவனம், ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து கேம் சேஞ்சர் மீதான சிக்கல் நீங்கியுள்ளது.
‘இந்தியன் 2’ படத்துக்குப் பிறகு ஷங்கர் ராம் சரணை வைத்து இயக்கியிருக்கும் படம் ‘கேம் சேஞ்சர்’. தில் ராஜு தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது படம் திட்டமிட்டபடி தமிழகத்தில் வெளியாகுமா என சந்தேகம் எழுந்திருந்தது.
அதாவது ‘இந்தியன் 3’ படத்தை ஷங்கர் முடித்துக்கொடுக்காமல் கேம் சேஞ்சர் படத்தை தமிழகத்தில் வெளியிடக்கூடாது என லைகா நிறுவனம் திரைத்துறை கூட்டமைப்பிடம் புகார் அளித்திருந்தது.
‘இந்தியன்-3’ படத்தை முடிக்க ஷங்கர் மேலும் ரூ.65 கோடி ரூபாய் பட்ஜெட் கேட்பதாக லைகா குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ‘இந்தியன் 2’ படத்தில் கடும் நஷ்டம் ஏற்பட்டதால், அவ்வளவு தொகை கொடுக்க முடியாது என லைகா தரப்பில் கூட்டமைப்பில் லைகா முறையீட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் ‘இந்தியன் 3’ திரைப்படத்தில் படமாக்கப்பட வேண்டிய (மீதமுள்ள) பாடல் மற்றும் காட்சிகளை எடுக்காமல் படத்தை வெளியிடுவது சரியாக இருக்காது என ஷங்கர் தரப்பில் திரைத்துறை கூட்டமைப்பினரிடம் விளக்கம் அளித்துள்ளனர். இது தொடர்பாக நான்கு நாட்களுக்கு மேல் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் இன்று சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து கேம்சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் திரையிடுவதில் உள்ள சிக்கல்கள் நீங்கியுள்ளன. வரும் 10 ஆம்தேதி வெள்ளியன்று கேம் சேஞ்சர் படம் வெளியாகிறது.