தனுஷ் நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
நடிகர் தனுஷ் நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாகி உள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில், கடைசியாக அவர் இயக்கி – நடித்த ‘ராயன்’ திரைப்படம் வெளியானது. தனுஷின் ஐம்பதாவது திரைப்படமாக உருவான இந்த படம், ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், தனுஷ் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
இதுவரை தனுஷ் ஏற்று நடித்த கதாபாத்திரங்களை விட, ‘ராயன்’ படத்தில் மொட்டை அடித்துக் கொண்டு, மூர்க்கமான அதே நேரத்தில் மிகவும் பாசமான ஒரு அண்ணனாக நடித்திருந்தார். ஒரு மெச்சூர்டான நடிப்பை தனுஷ் இந்த படத்தில் வெளிப்படுத்தியதை பார்க்க முடிந்தது.
இந்த படத்தில் நடித்து முடித்த கையோடு, தன்னுடைய சகோதரியின் மகன் நடிக்கும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் ஜனவரி மாத இறுதியில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தை தொடர்ந்து, தனுஷ் ‘இட்லி கடை’ படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தில் இட்லி விற்பனை செய்பவராக தனுஷ் நடித்துள்ளார். இந்த படத்தை தன்னுடைய நான்காவது படமாக , தனுஷ் இயக்கி, ஹீரோவாகவும் நடித்துள்ள நிலையில்… ஆகாஷ் பாஸ்கரன் டான் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில், தனுசுக்கு ஜோடியாக ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் நடித்த நித்யா மேனன் நடித்துள்ளார். ஷாலினி பாண்டே இரண்டாவது நாயகியாக நடிக்க, அருண் விஜய் வில்லனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிரகாஷ்ராஜ், சமுத்திரகனி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, பிரசன்னா ஜி கே படத்தொகுப்பு செய்ய, கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பட குழு வெளியிட்டுள்ளது. இதில் தனுஷ் ராஜ்கிரணுடன் நிற்பது போலவும், மற்றொரு புகைப்படத்தில் கையில் இரண்டு தூக்கு சட்டைகள் மற்றும் ஒரு கையில் காய்கறி பையுடன் நிற்கிறார்.
வேஷ்டி சட்டையில், தோளில் துண்டு போட்டு கொண்டு, நெத்தியில் பட்டை அடித்துக் கொண்டு, தனுஷ் ஒரு கிராமத்து மனிதர் போல் உள்ளதால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. இப்படம், கோடை விடுமுறையை குறிவைத்து ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.