IFFA 2024 : பல விருதுகளை அள்ளிய பொன்னியின் செல்வன்…

IFFA 2024 : பல விருதுகளை அள்ளிய பொன்னியின் செல்வன்…
  • PublishedSeptember 29, 2024

Iffa விருது வழங்கும் விழா ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024ஆம் ஆண்டுக்கான ஐஃபா விருது விழா அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் நடைபெற்றது.

இதில் இந்திய திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்களான, சியான் விக்ரம், கீர்த்தி சுரேஷ், சமந்தா, ஐஸ்வர்யா ராய், மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, நானி ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் விருது வென்றவர்கள் பட்டியலை பார்க்கலாம்.

சிறந்த படம்

சிறந்த படத்துக்கான ஐஃபா விருது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்தாண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன ஜெயிலர் படத்துக்கு வழங்கப்பட்டது.

சிறந்த நடிகர்

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்த நடிகர் சியான் விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான ஐஃபா விருது வழங்கப்பட்டது. அண்மையில் இவர் சைமா விருதுகள் நிகழ்ச்சியிலும் சிறந்த நடிகருக்கான விருதை தட்டிச்சென்றார்.

சிறந்த வில்லன்

சிறந்த வில்லன் நடிகருக்கான ஐஃபா விருது நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான மார்க் ஆண்டனி திரைப்படத்தில் வில்லனாக நடித்ததற்காக நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

சிறந்த நடிகை

பொன்னியின் செல்வன் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து அசத்திய நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு சிறந்த நடிகைக்கான ஐஃபா விருது வழங்கப்பட்டது. அப்படத்தில் நந்தினி, ஊமை ராணி என இரண்டு வேடங்களில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா, பாலகிருஷ்ணா கையால் அவர் விருது வாங்கினார்.

சிறந்த இயக்குனர்

பொன்னியின் செல்வன் என்கிற மாஸ்டர் பீஸ் படத்தை கொடுத்த இயக்குனர் மணிரத்னம் சிறந்த இயக்குனருக்கான ஐஃபா விருதை தட்டிச்சென்றார். அவர் தன்னுடைய படக்குழுவுடன் வந்து இவ்விருதை பெற்றுக்கொண்டார்.

சிறந்த துணை நடிகர்

சிறந்த துணை நடிகருக்கான ஐஃபா விருது நடிகர் ஜெயராமுக்கு வழங்கப்பட்டது. மனிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் ஆழ்வார்க்கடியான் நம்பி என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக அவருக்கு அவ்விருது வழங்கப்பட்டது.

சிறந்த துணை நடிகை

சிறந்த துணை நடிகைக்கான ஐஃபா விருதை சாஹஸ்ரா ஸ்ரீ வென்றார். இவர் கடந்த ஆண்டு அருண் குமார் இயக்கத்தில் சித்தார்த் ஹீரோவாக நடித்த சித்தா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதற்காக அவருக்கு விருது கிடைத்துள்ளது.

சிறந்த பெண்மணி

இந்திய சினிமாவின் சிறந்த பெண்மணி என்கிற சிறப்பு விருது நடிகை சமந்தாவுக்கு வழங்கப்பட்டது. அவரது திரைப்பயணத்தையும் நடிப்பையும் பாராட்டும் விதமாக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டு உள்ளது.

சிறந்த இசையமைப்பாளர்

சிறந்த இசையமைப்பாளர் மற்றும் பின்னணி இசை ஆகிய இரு பிரிவுகளிலும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு விருது வழங்கப்பட்டது. பொன்னியின் செல்வன் படத்திற்கு இசையமைத்ததற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *