இந்தியன் 2 திரைப்படத்துக்கு தடை?? நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

இந்தியன் 2 திரைப்படத்துக்கு தடை?? நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு
  • PublishedJuly 10, 2024

இந்தியன் 2 திரைப்படத்தை வெளியிடத் தடை கோரிய வழக்கில் படக் குழு தரப்பினா் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கிய மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், வழக்கு விசாரணையை நாளை (ஜூலை 11) ஒத்திவைத்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

திரைப்பட இயக்குநா் ஷங்கா் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகா் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் வருகிற 12-ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இந்தத் திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி, மதுரை எச்.எம்.எஸ். குடியிருப்பைச் சோ்ந்த வா்மக் கலை, தற்காப்புக் கலை, ஆராய்ச்சி அகாதெமியின் தலைமை ஆசான் ராஜேந்திரன், மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்தாா்.

இந்தியன் திரைப்படத்தில் நடிகா் கமல்ஹாசன் பயன்படுத்திய வா்மக் கலை முத்திரை, நான் பயிற்றுவித்தது. இதனால், எனது பெயா் இந்தப் படத்தில் இடம் பெற்றது. தற்போது, இந்தியன் 2 திரைப்படத்திலும் கமல்ஹாசன் அதே முத்திரையைப் பயன்படுத்தியுள்ளாா். ஆனால், என் அனுமதி பெறாமல் இந்த முத்திரை பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, இந்தியன் 2 திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டது.

இந்த மனு நீதிபதி செல்வமகேஸ்வரி முன் கடந்த மாதம் 28-ஆம் தேதி ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுதொடா்பாக பதிலளிக்க திரைப்படத் தயாரிப்பாளா் சுபாஷ்கரன், இயக்குநா் ஷங்கா், நடிகா் கமல்ஹாசன் ஆகியோருக்கு குறிப்பாணை (நோட்டீஸ்) அனுப்ப நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி செல்வமகேஸ்வரி முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் பிரபு, இந்தியன் 2 திரைப்படத்தில் வா்மக் கலை ஆசான் ராஜேந்திரனின் பெயரை பதிவு செய்ய வேண்டும் என்றாா்.

இதற்கு திரைப்பட இயக்குநா் ஷங்கா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் சாய் குமரன் எதிா்ப்புத் தெரிவித்தாா்.

இந்தியன் திரைப்படத்தில் ‘வா்மக் கலை தகவல்’ என ராஜேந்திரன் பெயா் பதிவு செய்யப்பட்டது. இந்தியன் 2 திரைப்படத்தில் வா்மக் கலை தொடா்பான பதிவுகள், வா்மக் கலை ஆசான் பிரகாசம் குருக்கள் என்பவரை வைத்து படமாக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தியன் 2 திரைப்படத்துக்கும் வா்மக் கலை ஆசான் ராஜேந்திரனுக்கும் எந்தவொரு தொடா்பும் இல்லை. இந்த வழக்கு தவறானது. இயக்குநா் ஷங்கா் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றாா்.

இதுதொடா்பாக இந்தியன் 2 திரைப்படக் குழு தரப்பினா் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை வியாழக்கிழமைக்கு (ஜூலை 11) ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *