பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானியின் தேசிய விருது ரத்து.. மத்திய அரசு அதிரடி

பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானியின் தேசிய விருது ரத்து.. மத்திய அரசு அதிரடி
  • PublishedOctober 6, 2024

பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி என்கிற ஷேக் ஜானி பாஷா தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாக இளம் நடனக் கலைஞர் கொடுத்த புகார், ஒட்டுமொத்த திரை உலகையும் உலுக்கியது.

இதனால் தலைமறைவாக இருந்த ஜானி மாஸ்டர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஏற்கனவே இவருக்கு திருச்சிற்றம்பலம் படத்திற்கு நடனம் இயக்கியதற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்த மத்திய அரசு அதை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

ஜானி மாஸ்டர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டதால், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். ஜானி மாஸ்டர் இந்த ஆண்டு நடந்து முடிந்த ஆந்திர சட்ட மன்ற பொதுத் தேர்தலில் ஜனசேனா கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

அவர் மீது பாலியல் புகார் எழுந்த நிலையில் அவரை உடனடியாக கட்சியிலிருந்து நீக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், ஜானி மாஸ்டர் மீது குற்றம் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டதாக பேச்சுகள் எழுந்தது.

இந்நிலையில், இந்த புகாருக்குப் பின்னர், ஜனசேனா கட்சியில் இருந்தும் நீக்கப்பட்ட ஜானி மாஸ்டர் தலைமறைவாக இருந்தார். தொடர்ந்து ஹைதராபாத் காவல்துறை அவரைத் தேடி வந்தது. அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், ஜானி மாஸ்டர் தலைமறைவானது உறுதியானது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி ஜானி மாஸ்டரை ஹைதராபாத் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

ஜானி மாஸ்டர் தரப்பில் ஜாமீனுக்கு தொடர்ந்து முயற்சி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் அவருக்கு ஏற்கனவே தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தான் தேசிய விருது பெற டெல்லிக்குச் செல்ல வேண்டும் எனக் கூறி ஜாமீன் கோரினார்.

இதனால் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. அதில், இன்று முதல் அதாவது, அக்டோபர் 6ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் அந்த நிபந்தனை ஜாமீனில், 8ஆம் தேதி நடைபெறும் விருது வழங்கும் விழாவில், கலந்து கொண்டுவிட்டு, மீண்டும் 11ஆம் தேதி ஆஜராகவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தேசிய விருதுகள் வழங்கும் ஆணையகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்க்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து செய்யப்படுகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு பலருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதற்கே பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் மத்திய அரசு ஜானி மாஸ்டருக்கான விருதினை ரத்து செய்துள்ளது. விருது ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஜாமீனும் ரத்தாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *