இந்தியன் 3 ரிலீஸ் ஆகாதா? கமல் ரசிகர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996-ம் ஆண்டு திரைக்கு வந்த படம் இந்தியன். இப்படத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்த இப்படம் பான் இந்தியா அளவில் மாஸ் ஹிட் அடித்தது.
இந்தியன் படத்தின் அதிரி புதிரியான வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கினார் இயக்குனர் ஷங்கர். பல்வேறு தடைகளுக்கு பின்னர் 2024-ம் ஆண்டு இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆனது.
லைகா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்த இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் கடந்த ஜூலை மாதம் திரைக்கு வந்தது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்தியன் 2 திரைப்படம் அட்டர் பிளாப் ஆனது.
இந்தியன் 2 படத்தின் தோல்வியால் அப்செட்டில் உள்ள இயக்குனர் ஷங்கர், அடுத்ததாக ராம்சரணை வைத்து இயக்கி உள்ள கேம் சேஞ்சர் படம் மூலம் தரமான கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார். அப்படம் வருகிற டிசம்பர் மாதம் திரைக்கு வருகிறது.
கேம் சேஞ்சர் படத்தின் ரிலீசுக்கு பின்னர் இந்தியன் 3 படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதில் புது ட்விஸ்ட் ஒன்றை வைத்துள்ளனர்.
இந்தியன் 3 படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
இந்தியன் 2 படத்தின் ரிசல்ட் காரணமாக இந்தியன் 3 படத்தை தியேட்டரில் வெளியிட்டால் அதன் பிசினஸ் எதிர்பார்த்தபடி இருக்காது என்கிற காரணத்தால் படக்குழு இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி இந்தியன் 2 படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்கள் நஷ்டமடைந்துள்ளதால், இந்தியன் 3 படத்தை அவர்கள் நஷ்டத்துக்கு ஈடுகட்டும் விதமாக ஃப்ரீயாக கேட்கக் கூடும் என்கிற பயமும் படக்குழுவுக்கு உள்ளதாம். இதனால் உஷாராக ஓடிடியில் அப்படத்தை வெளியிட பிளான் போட்டு வருகிறார்கள்.
மேலும் இந்தியன் 2 படத்தை வாங்கிய நெட்பிளிக்ஸ் நிறுவனம் தான் இந்தியன் 3 படத்தின் ஓடிடி உரிமையையும் கைப்பற்றி இருக்கிறது. இந்தியன் 2 படத்தை 125 கோடிக்கு வாங்கியிருந்த அந்நிறுவனத்திடம் இருந்து இந்தியன் 3 படத்துக்காக பெரும் தொகையை எதிர்பார்க்கிறதாம் லைகா.
ஒரு வேளை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கேட்ட தொகையை கொடுக்காமல் கைவிரித்தால், மீண்டும் தியேட்டரில் தான் இந்தியன் 3 படத்தை வெளியிடுவார்கள் என கூறப்படுகிறது.