கமலா காமேஷ் மரண செய்தியால் சர்ச்சை – உண்மையை உடைத்த மகள் உமா

கமலா காமேஷ் மரண செய்தியால் சர்ச்சை – உண்மையை உடைத்த மகள் உமா
  • PublishedJanuary 11, 2025

பிரபல நடிகை கமலா காமேஷ் உயிரிழந்ததாக வெளியான தகவலை தொடர்ந்து அவருடைய மகள் உமா ரியாஸ் கான், இந்த தகவலை மறுத்துள்ளார். மேலும் தன்னுடைய வீட்டில் நிகழ்ந்த மற்றொரு துக்க நிகழ்வு குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் காமேஷின் மனைவிதான் கமலா. இதுவரை சுமார் 450-க்கும் மேற்பட்ட பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமானவர். 1971 ஆம் ஆண்டு வெளியான ‘குடிசை’ என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான கமலா காமேஷ், அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு அம்மாவாக நடித்தார்.

பின்னர் குடும்பம் ஒரு கதம்பம் திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த லட்சுமி அம்மாள் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தொடர்ந்து அம்மா கதாபாத்திரங்களே கிடைத்ததால், அதேபோன்ற வேடங்களையே தேர்வு செய்து நடித்தார். அந்த வகையில் மணல் கயிறு, சிம்லா ஸ்பெஷல், மூன்று முகம், கோபுரங்கள் சாய்வதில்லை, ஆகாய கங்கை, எங்கேயோ கேட்ட குரல், போன்ற ஏராளமான படங்களில் நடித்தார்.

குறிப்பாக சம்சாரம் ஒரு மின்சாரம் திரைப்படத்தில் இவர் விசுவுக்கு மனைவியாக நடித்த கோதாவரி கதாபாத்திரத்தில் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது.

இவரைத் தொடர்ந்து இவருடைய மகள் உமாவும் தமிழ் சினிமாவில் நடிகையாக அறியப்படுகிறார். அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த உமா, பின்னர் அன்பே சிவம், கனவு மெய்ப்பட வேண்டும், மௌனகுரு, அம்புலி, மரியான், பிரியாணி, தூங்காவனம், உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி’ போன்ற பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு கலக்கினார்.

இந்த நிலையில், நடிகை கமலா காமேஷ் தன்னுடைய 72 வயதில் காலமானதாக ஒரு தகவல் சமூக வலைதளத்தில் பரவியது. ஆனால் இந்த தகவல் உண்மையில்லை என்பதை கமலா காமேஷின் மகள் உமா தெளிவுபடுத்தி உள்ளார்.

அதே நேரம் இறந்தது, தன்னுடைய அம்மா இல்லை என்றும்… ரியாஸ் கானின் அம்மா தன்னுடைய மாமியார் ரஷீதா பானு தான் இறந்து விட்டதாகவும். அவர் சில வருடங்களாகவே உடல் நல பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு வயது 72 என தெரிவித்துள்ளார். இதன் மூலம் கமலா காமேஷ் இறந்ததாக வெளியான தகவல் வதந்தி என்பது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *