ஆஸ்கர் ரேஸில் இருந்து நீக்கப்பட்டது கங்குவா… ஆடுஜீவிதமும் அவுட்….
திரைத்துறையின் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர். இவ்விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு 97-வது ஆஸ்கர் விருது விழா வருகிற மார்ச் 2-ந் தேதி அமெரிக்காவில் உள்ள டால்பி திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
இந்த விருது விழாவுக்கான பரிந்துரைப் பட்டியலில் 10 இந்தியப் படங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், அதன் இறுதிப்பட்டியலில் என்னென்ன படங்கள் இடம்பெற்றிருக்கிறது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி நடிகர் சூர்யாவின் கங்குவா, மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த ஆடுஜீவிதம், பாலிவுட் படமான சாவர்க்கர், ஆல் வி இமேஜின் அஸ் லைட், கேர்ள்ஸ் வில் பி கேர்ள்ஸ், சந்தோஷ் உள்பட 10 திரைப்படங்கள் இந்தியா சார்பில் ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றிருந்தன.
இதன் இறுதிப்பட்டியலில் இடம்பெறும் படங்களில் சிறந்தது என தேர்வு செய்யப்பட்டு அதற்கு ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில் இன்று வெளியாகி உள்ள இறுதி நாமினேஷன் பட்டியலில் சூர்யாவின் கங்குவா உள்பட 9 இந்திய படங்கள் இடம்பெறவில்லை.
இறுதி நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு இந்திய படம் அனுஜா. இது சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படத்திற்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்திருந்த கங்குவா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி படுதோல்வியை சந்தித்தாலும், அப்படம் ஆஸ்கர் ரேஸில் இடம்பெற்றபோது அதை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.
ஆனால் இறுதிப்பட்டியலில் அப்படம் இடம்பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதுமட்டுமின்றி பிருத்விராஜ் உயிரைக் கொடுத்து நடித்த ஆடுஜீவிதம் படமும் ஆஸ்கர் நாமினேஷனில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளது புரியாத புதிராகவே உள்ளது.