தேவரகொண்டாவுக்கு ஜோடியாக…கீர்த்தி சுரேஷ்

விஜய் தேவரகொண்டா நடிப்பில் அடுத்து வெளியாகும் விதமாக தயாராகி வரும் படம் ‛கிங்டம்’. கவுதம் தின்னனூரி என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பாக்யஸ்ரீ போஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக, ‛ரவுடி ஜனார்த்தனா’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் விஜய் தேவரகொண்டா. ரவிகிரண் கோலா இயக்குகிறார்.
இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிப்பார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்தப்படத்தின் தயாரிப்பு நிர்வாகி பேசும்போது, கீர்த்தி சுரேஷ் உடன் இந்த படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை முடிந்து விட்டது என்றும் வரும் மே மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் கூறியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னதாக 2018ல் நாக் அஸ்வின் இயக்கத்தில் ‛மகாநடி’ என்கிற படத்தில் விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் இருவரும் நடித்திருந்தனர் என்றாலும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காட்சிகள் என எதுவும் இல்லை.
அந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக சமந்தா தான் நடித்திருந்தார். அந்த வகையில் தற்போது இவர்கள் இணையும் இரண்டாவது படத்தில் இருவரும் முதன்முறையாக ஜோடியாக நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.