காதல் மோசடி புகார் எதிரொலி… விசாரணை வளையத்துக்குள் சிக்கிய விக்ரமன்

காதல் மோசடி புகார் எதிரொலி… விசாரணை வளையத்துக்குள் சிக்கிய விக்ரமன்
  • PublishedJuly 21, 2023

பிக்பாஸ் விக்ரமன் காதலிப்பதாக கூறி பண மோசடி செய்ததாக கிருபா முனுசாமி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆனவர் விக்ரமன். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செய்தி தொடர்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் மீது சென்னை பெருங்குடியை சேர்ந்த கிருபா முனுசாமி என்பவர் கொடுத்த மோசடி புகார் தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவர் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றி இருக்கிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிருபா முனுசாமி டுவிட்டரில் விக்ரமன் தன்னிடம் மெசேஜ் வாயிலாக உரையாடியதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வெளியிட்டு அவர் தன்னை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி தன்னிடம் பணம் பறித்து ஏமாற்றிவிட்டதாக பரபரப்பு புகார் தெரிவித்திருந்தார்.

தன்னைப்போல் 15 பெண்களை விக்ரமன் ஏமாற்றி இருப்பதாகவும் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தார் கிருபா முனுசாமி.

இதையடுத்து கிருபா முனுசாமி குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என திட்டவட்டமாக கூறிய விக்ரமன், ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது போல் இந்தக் கதைக்கும் இரு பக்கங்கள் உள்ளது எனக்கூறி கிருபா முனுசாமி தனக்கு எழுதிய காதல் கடிதங்களையும் வெளியிட்டு இருந்தார் விக்ரமன். அதேபோல் அந்த பதிவில் அறம் வெல்லும் எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில், தற்போது விக்ரமன் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுத்துள்ளார் கிருபா, அவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் விக்ரமன் மீது புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், விக்ரமனும், தானும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நெருக்கமாக பழகி வந்ததாகவும், தன்னை காதலிப்பதாக சொன்ன அவரிடம் சட்ட ரீதியாக திருமணம் செய்துகொள்ளலாம் என கேட்டபோது அவர் மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தன்னை காதலிப்பதாக கூறி ரூ.13.7 லட்சம் பணம் வாங்கிய விக்ரமன், அதில் 12 லட்சத்தை திருப்பி கொடுத்துவிட்டார். எஞ்சியுள்ள ரூ.1.7 லட்சம் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இப்படி காதலிப்பதாக கூறி மோசடி செய்த விக்ரமன் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் அவர்மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து எனக்கு நீதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என கிருபா அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கிருபாவின் புகார் மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால் அடுத்தக்கட்டமாக இதுகுறித்து விக்ரமனிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *