காணாமல் போன ‘ஹார்ட் டிஸ்க்’ கிடைத்தது… அடுத்த ஆட்டத்திற்கு தயாரான ‛லால் சலாம்’

காணாமல் போன ‘ஹார்ட் டிஸ்க்’ கிடைத்தது… அடுத்த ஆட்டத்திற்கு தயாரான ‛லால் சலாம்’
  • PublishedMarch 12, 2025

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான படம் ‛லால் சலாம்’. ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்தார்.

கடந்த வருடம் பிப்ரவரி மாதம் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெறவில்லை, வியாபார ரீதியாகவும் வெற்றியைப் பெறவில்லை.

பொதுவாக ஒரு புதிய படம் வெளிவந்தால் நான்கு வாரங்களில் ஓடிடி தளத்தில் வெளியாகிவிடும். ஆனால், இந்தப் படம் வெளிவந்து ஒரு வருடமாகியும் இதுவரை எந்த தளத்திலும் வெளியாகவில்லை.

படம் வெளியான போதே இப்படத்தின் ஓடிடி உரிமையை வாங்க எந்த நிறுவனமும் ஆர்வம் காட்டவில்லை என்றார்கள்.

இப்படத்திற்கான முக்கியக் காட்சிகளைப் பதிவு செய்த ‘ஹார்ட் டிஸ்க்’ காணாமல் போய்விட்டது. அதனால்தான் படத்தைத் தரமானதாகக் கொடுக்க முடியவில்லை என்ற ஒரு காரணத்தையும் சொன்னார்கள்.

வெளியீட்டைத் தாமதப்படுத்தக் கூடாது என்ற காரணத்தில் இருக்கும் காட்சிகளை வைத்து படத்தை வெளியிட்டதாகவும் கூறினார்கள்.

கடந்த வருடக் கடைசியில் காணாமல் போன ‘ஹார்ட் டிஸ்க்’ கிடைத்துவிட்டதாகவும், அந்தக் காட்சிகளைச் சேர்த்து ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட உள்ளதாகவும் பேசப்பட்டது.

அந்தக் காட்சிகளுடன் படத்தை மீண்டும் எடிட் செய்துள்ளார்களாம். அவற்றை வைத்து படத்திற்கு மீண்டும் சென்சார் வாங்கி ஓடிடியில் விரைவில் வெளியிடப் போவதாக லேட்டஸ்ட் தகவல் வந்துள்ளது.

அதனால், ஓடிடியில் நீங்கள் பார்க்கப் போவது வேறு ஒரு ‘லால் சலாம்’ ஆக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *