சிம்பிளாக வந்து கெத்து காட்டிய ‘லப்பர் பந்து” – படக் குழுவினர் மகிழ்ச்சி
லப்பர் பந்து திரைப்படம் எதிர்பார்த்ததை விட ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக படக் குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட “லப்பர் பந்து” திரைப்படம் கடந்த 20ம் தேதி திரைக்கு வந்தது.
இந்த நிலையில் திரைப்படக் குழுவினர் சேலம் வருகை தந்தனர். சேலம் கிச்சிபாளையம் பகுதியில் உள்ள பிரபல தனியார் திரையரங்கில் படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து நடிகர்கள் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், நடிகைகள் உள்ளிட்டோர் ரசிகர்கள் முன் தோன்றி அவர்களை உற்சாகப்படுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இக்குழுவினர், லப்பர் பந்து திரைப்படம் எதிர்பார்த்ததை விட ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தனர். லப்பர் பந்து திரைப்படத்தை ரசிகர்கள் உற்சாகத்தோடு பார்த்து ரசிப்பதாகவும், ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களுக்கான வேலையை முறையாக செய்துள்ளதாகவும், வயதான பாத்திரத்தில் தினேஷை நடிக்க வைக்க சற்று யோசித்ததாகவும் ஆனால் அவர் உடனடியாக ஒப்புக்கொண்டு அந்த பாத்திரத்தில் நடித்ததாகவும் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து தெரிவித்தார்.
“விராட் கோலி” என்ற பாத்திரத்தில் நடித்தவர் மட்டுமே அதிக டேக் வாங்கியதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும், பழைய பாடல்களை படத்தில் திணிக்கவில்லை, விஜயகாந்த் ரசிகன், விஜய் ரசிகன் போன்ற கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டிருந்த காரணத்தால் பழைய பாடல்களை படத்தில் பயன்படுத்த வேண்டியிருந்ததாகவும் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து விளக்கமளித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் தினேஷ் பல வெற்றிபடங்களில் நடித்திருந்தாலும் இந்தப்படத்தில் ஒரு “கெத்து” கிடைத்துள்ளதாகவும் கூறினார்.