லதா ரஜினிகாந்த் எதிரான மோசடி வழக்கு.. நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்துக்கு எதிராக தொடரப்பட்ட மோசடி வழக்கை விசாரணை செய்த பெங்களூரு நீதிமன்றம், அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, அவருடைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய திரைப்படம் ‘கோச்சடையான்’. இந்த படத்தை மீடியா ஒன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் முரளி தயாரித்திருந்தார். இவருக்கு ஆட் பீரோ நிறுவனத்தைச் சேர்ந்த, அபிர்சந்த் என்பவர் சுமார் 6.2 கோடி கடன் கொடுத்ததாக தெரிகிறது. இப்படம் வெளியாகி பெருத்த நஷ்டத்தை சந்தித்ததால், முரளியால் வாங்கிய கடன் தொகையை திரும்ப கட்ட முடியவில்லை.
மேலும் இந்த படத்திற்காக கடன் பெரும் போது… போடப்பட்ட ஒப்பந்தத்தின் ஆவணங்களில் லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்து கையெழுத்து போட்டுள்ளதால், முரளி கடனாகப் பெற்ற தொகையை, லதா ரஜினிகாந்த் திரும்ப கொடுக்க வேண்டும் என ஆட் பீரோ நிறுவனத்தைச் சேர்ந்த, அபிர்சந்த் 2015 ஆம் ஆண்டு பெங்களூரு முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பான விசாரணை கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது.
இந்த வழக்கை விசாரித்த போலீஸார், லதா ரஜினிகாந்த் மீது இந்திய தண்டனை சட்டம் 196,199, 420, 463 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
அந்த குற்றப்பத்திரிகையில் தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக்கோரி லதா ரஜினிகாந்த் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், லதா ரஜினிகாந்த் மீது போடப்பட்ட வழக்குகளில் 196, 199, 420 உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி அவர் மீது இருந்த 3 பிரிவுகளும் ரத்து செய்யப்பட்டன.
மேலும் அவர் மீதான 463 பிரிவு குறித்த வழக்கை கீழ் நீதிமன்றம் விசாரிக்கலாம் என கூறியது. இந்த வழக்கையும் தள்ளுபடி செய்ய கோரி, லதா ரஜினிகாந்த் மீண்டும் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம், லதா ரஜினிகாந்துக்கு எதிரான இந்த மோசடி வழக்கை தொடர்ந்து பெங்களூரு நீதிமன்றத்திற்கு விசாரிக்க அனுமதி கொடுத்தது. மேலும் மோசடி வழக்கில் விடுவிக்கக் கோரி பெங்களூரு நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மனுத் தாக்கல் செய்துகொள்ளலாம் என்றும், மத்தியஸ்தர்கள் மூலம் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க இரு தரப்பினருக்கும் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.