லியோ வெற்றியால் 2 மடங்கு அதிகரித்த சம்பளம் : ஓபனாக சொன்ன லோகேஷ்

லியோ வெற்றியால் 2 மடங்கு அதிகரித்த சம்பளம் : ஓபனாக சொன்ன லோகேஷ்
  • PublishedJuly 15, 2025

ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்திற்கு தான் வாங்கிய சம்பளம் என்னவென்பதை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளிப்படுத்தியுள்ளார்.

ஜெயிலர் மற்றும் வேட்டையன் படங்களைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் அவருடன் நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் இடம் பெற்றுள்ளனர். தங்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

லியோ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் என்பதால் கூலி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது. அத்துடன் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், கூலி படத்திற்கு ரஜினிகாந்த் 260 கோடி ரூபாய் முதல் 280 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்றிருக்கலாம் என்று தகவல்கள் வெளிவந்தன. அதேபோல் கூலி படத்திற்காக லோகேஷ் கனகராஜ் 60 கோடி ரூபாயும், நடிகர் நாகார்ஜுனா 35 கோடி ரூபாயும் சம்பளம் பெற்றிருப்பதாகவும் கூறப்பட்டன.

இந்நிலையில் கூலி படத்திற்காக வாங்கிய ஊதியத்தை லோகேஷ் கனகராஜ் வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் கூலி படத்தின் பட்ஜெட் மற்றும் ரஜினி ஆகியோர் ஊதியம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த லோகேஷ்,

“ரஜினிகாந்த் சாரின் சம்பளம் பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது. ஆனால் எனது சம்பளம் ரூ.50 கோடி என நீங்கள் குறிப்பிட்டீர்கள். இது எனது முந்தைய படமான லியோ வெற்றியால் அதிகமானது. லியோ திரைப்படம் ரூ.600 கோடி வசூலித்தது. இதனால் எனது சம்பளமும் அந்தப் படத்தில் வாங்கியதை விட இரண்டு மடங்கு அதிகமானது.

இந்த பணத்தில் நான் வரி செலுத்துவதோடு எனது நண்பர்கள் உள்ளிட்டவர்களும் உதவ முடிகிறது. இந்த நிலையை அடைய நான் செய்த தியாகங்கள் குறித்து சொல்லப்போவதில்லை. கடைசி இரண்டு ஆண்டுகள் கூலி படத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தினேன். ஆனால், அது எனது பொறுப்பு.

கூலி திரைப்படம் ரூ.1000 கோடி வசூலிக்குமா எனக் கேட்கிறார்கள். அதை என்னால் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், மக்கள் ரூ.150 கொடுத்து வாங்கிப் பார்க்கும் டிக்கெட்டிற்கு ஏற்ற படமாக கூலி அமையும். அதனை என்னால் உறுதியாக சொல்ல முடியும். எந்தப் படைப்பாளியும் நம்பர் கலாச்சாரத்தைப் பற்றி கவலைப்படுவது கிடையாது.

அது ஒரு மேலாளரின் வேலை. இந்த நம்பர் கலாச்சாரம் சீக்கிரமே காணாமல் போகும் என நம்புகிறேன்.” என்று விரிவாக பேசியிருக்கிறார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *