32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாளத்தில் மதுபாலா
தமிழில் பாலச்சந்தர் இயக்கிய அழகன், வானமே எல்லை படங்களின் மூலம் அறிமுகமாகி மணிரத்னத்தின் ரோஜா மூலம் இந்திய அளவில் மிகப்பெரிய நடிகையாக பிரபலமானவர் நடிகை மதுபாலா.
இப்போது இவர் பெயர் மது ஷா. தொடர்ந்து ஜென்டில்மேன் உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவர் பிறகு தெலுங்கு ஹிந்தி பக்கம் சென்று கவனம் செலுத்த துவங்கி விட்டார்.
அதன் பிறகு திருமணத்திற்கு பிறகு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் மதுபாலா.
கடந்த 1992ல் மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக யோதா என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் மதுபாலா.
அதன் பிறகு தற்போது 32 வருடம் கழித்து மீண்டும் ஒரு மலையாள படத்தில் நடித்துள்ளார் மதுபாலா.
இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் கதையின் நாயகியாக அதுவும் தமிழ் பேசும் பெண்ணாகவே நடித்துள்ளார் மதுபாலா.
கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு தமிழில் வாயை மூடி பேசவும் என்கிற படத்தில் மதுபாலா நடித்திருந்தார். ஆனால் அந்த படம் தமிழில் எடுக்கப்பட்டு மலையாளத்திலும் டப்பிங் செய்யப்பட்டது.
அந்த வகையில் மீண்டும் 32 வருடங்கள் கழித்து இப்போது நேரடியாக ஒரு மலையாள படத்தில் மதுபாலா நடித்திருக்கிறார்.
இந்த படத்தின் கதை வாரணாசியை சுற்றி நடப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது. வர்ஷா வாசுதேவ் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இயக்குனர் வர்ஷா, வாரணாசி சென்றபோது அதன் பின்னணியில் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என முடிவு செய்து அங்கேயே தங்கி இந்த படத்தின் கதையை எழுதியுள்ளார்.
மேலும் தமிழ் பேசும் ஒரு நடிகை அதுவும் அவர் மணிரத்னம் பட கதாநாயகியாக நடித்திருக்க வேண்டும் என தனது தேடலை ஆரம்பித்தவர் மதுபாலாவிடம் இந்த கதையை சொன்னதுமே, அவர் நடிக்க ஒப்புக்கொண்டாராம். அதுமட்டுமல்ல இந்த கதைக்கு அவர்தான் வெகு பொருத்தமாக இருந்தார் என்றும் கூறுகிறார் வர்ஷா வாசுதேவ்.