எல் 2 எம்புரான் சர்ச்சை குறித்து…மோகன்லால் பதிவு

பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடித்து சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த ‛எல் 2 எம்புரான்’ படம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகள் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளதென பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள். அதையடுத்து படத்திலுள்ள 17 காட்சிகளை நீக்கவும்
படத்தின் வில்லன் பெயரை மாற்றவும் படக்குழு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது. இதனிடையே, இந்த சர்ச்சை குறித்து சற்று முன்னர் மோகன்லால் பேஸ்புக்கில் பதிவு ஒன்றைப் போட்டுள்ளார்.
அதில், “லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான ‘எம்புரான்’ படத்தில் இடம் பெற்றுள்ள சில அரசியல் மற்றும் சமூகக் கருத்துக்கள் என் அன்புக்குரியவர்கள் பலருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி இருப்பதை அறிந்தேன். ஒரு கலைஞனாக, என்னுடைய எந்தப் படமும் எந்தவொரு அரசியல் இயக்கம், சித்தாந்தம் அல்லது பிரிவினர் மீது வெறுப்புணர்வைக் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துவது எனது கடமை.
எனவே, எனது அன்புக்குரியவர்களுக்கு ஏற்பட்ட துயரத்திற்காக நானும் ‘எம்புரான்’ குழுவினரும் உண்மையிலேயே வருந்துகிறோம். மேலும், படத்தின் பின்னணியில் உள்ள பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்பதையும் உணர்கிறோம். படத்திலிருந்து இது போன்ற காட்சிகளை கட்டாயமாக நீக்க முடிவு செய்துள்ளோம்.
கடந்த நான்கு தசாப்தங்களாக எனது திரையுலக வாழ்க்கையை உங்களில் ஒருவராக வாழ்ந்து வருகிறேன். உங்கள் அன்பும் நம்பிக்கையும் மட்டுமே எனது பலம். அதைவிட மோகன்லால் யாரும் இல்லை என்றே நம்புகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.